எதிர்வரும் காலங்களில் சூழலில் வீசப்பட்டும் கழிவுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
எதிர்வரும் காலங்களில் வீடுகளில், வியாபார நிலையங்களின் முன்னால் வீசப்பட்டுள்ள கழிவுகளை மாநகர சபை அகற்றாது என்பதுடன், அவ்வாறு கழிவுகள் வீசப்பட்டிருந்தால் மாநகர சபை கட்டளைச் சட்டத்தின் கீழ் பொதுச்சுகாதாரம் தொடர்பான துணை விதிகளின் கீழும், சுற்றாடல் பாதுகாப்புச் சடத்தின் கீழும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் எம்.தயாபரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் தயாபரனின் ஊடக சந்திப்பு இன்று மட்டக்களப்பு மாநகரசபையில் நடைபெற்றுள்ளது.
மழைக்காலத்தில் மக்களின் குடியிருப்பு பகுதிகளில் நுளம்பு தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் வெள்ள நீரை வெளியேற்ற உதவுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
பொதுக் கழிவுகளை அகற்றுவது தொடர்பாகவும், சுற்றாடலைப் பாதுகாப்பது தொடர்பாகவும் மாநகர சபை தொடர்ச்சியாகப் பல சவால்களுக்கு முகங்கொடுத்து வருகிறது.
பொது மக்கள் தமது சுற்றாடலைச் சுகாதார விதி முறைகளுக்கு அமையப் பேணாமை மிகமுக்கிய குறைபாடாக உள்ளது.
உரிமையாளர்கள் இல்லாத காணிகள் குப்பைத்தொட்டிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. பொதுமக்கள் பொது இடங்களிலும், வீதிகளிலும் கழிவுகளை வீசிச் செல்லுவது அடுத்த சவாலாகும்.
பல பூங்காக்கள் உணவுச்சாலைகளாக மாறி வருகின்றன. பொலித்தின்களும் ஏனைய கழிவுகளும் நகரை அசுத்தமாக்கி வருகின்றன.
எனவே 2021ல் நாம் இவற்றை இல்லாமல் செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
பொதுக் கழிவுகளை அகற்றுவது தொடர்பாக மாநகர சபை தொடர்ச்சியாகப் பல பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றது.
குறிப்பாக ஆளணிப்பற்றாக்குறை, வாகனங்களின் அல்லது முறையான வாகனங்களின் பற்றாக்குறை என்பன மிக முக்கிய குறைபாடுகள் ஆகும்.
இத்தகைய சவால்களுக்கு மத்தியிலும் எமது கடமைகளைச் சிறப்பாகச் செய்துவருகின்றோம்.
பொதுமக்கள் வாழும் பிரதேசங்கள், வியாபார பிரதேசங்கள், பொது இடங்கள் என்பவற்றில் எமது சேவை மேற்கொள்ளப்படுகின்றது.
எனினும் பொதுமக்களும், வியாபாரிகளும் பொது இடங்களில் கழிவுகளை வீசி வருவதனால் அழகிய மாநகரம் அழுக்கான நகரமாக மாறிவருகின்றது.
எனவே இவற்றைத் தவிர்ப்பதற்காகப் பொதுமக்களும், வியாபாரிகளும் ஒத்துழைப்பை வழங்குமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
கழிவுகளைத் தரம் பிரிப்பது தொடர்பாக எம்மால் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றி வீடுகளிலும் வியாபார நிலையங்களிலும் கழிவுகளைப் பாதுகாப்பாக வைத்து மாநகர சபை ஊழியர்களிடம் கையளிப்பது உங்களது கடமையாகும்.
இதனால் சூழல் அழகாகவும், சுகாதாரமாகவும் பேணப்படும்.
எனவே எதிர்வரும் காலங்களில் வீடுகளில், வியாபார நிலையங்களின் முன்னால் வீசப்பட்டுள்ள கழிவுகளை மாநகர சபை அகற்றாது என்பதுடன், அவ்வாறு கழிவுகள் வீசப்பட்டிருந்தால் மாநகர சபை கட்டளைச் சட்டத்தின் கீழ் பொதுச்சுகாதாரம் தொடர்பான துணை விதிகளின் கீழும், சுற்றாடல் பாதுகாப்புச் சடத்தின் கீழும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை அறியத்தருகின்றேன்.
அழகிய சுகாதாரமான நகரை உருவாக்க அனைவரதும் ஒத்துழைப்பை வேண்டுகின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam