விக்னேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை! அமைச்சர் சரத் வீரசேகர வெளிப்படுத்தியுள்ள விடயம்
நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரன் போன்றோருக்கு எதிராக எதிர்வரும் நாட்களில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
பாதுக்க பகுதியில் அண்மையில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்றை தமிழ் மக்களே தெரிவு செய்து கொள்ளும் வகையிலான பொதுவாக்கெடுப்பு ஒன்று சர்வதேச சமூகத்தினால் நடத்தப்படுவதற்கு, இந்தியா தலைமையேற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்ட கருத்து தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில், சீ.வி.விக்னேஸ்வரன் இலங்கையின் கொழும்பில் பிறந்து 65 ஆண்டுகள் சிங்களவர்களுடன் வாழ்ந்துவிட்டு தற்போது வடக்கிற்கு சென்று சிங்களவர்களுக்கு வடக்கில் வாழ்வதற்கு உரிமை இல்லை என கூறுகின்றார்.
வடக்கில் எந்தவொரு புத்தர்சிலையையும் நிறுவ முடியாதென பேரணி செல்கின்றார். இவ்வாறானவர்களே இனங்களுக்கு இடையில் ஒற்றுமையின்மையை ஏற்படுத்துகின்றனர்.
இவ்வாறாக ஒற்றுமையின்மையை ஏற்படுத்தும் விக்னேஸ்வரன் போன்றோருக்கு எதிராக எதிர்காலத்தில் சட்டநடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.




