தமிழகத்தின் புதிய முதலமைச்சர் விஜய்க்கு அமைச்சர் சந்திரசேகரின் முக்கிய கோரிக்கை
தமிழ்நாட்டின் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ள விஜய் மீது, மக்களுக்கு புதிய நம்பிக்கையொன்று ஏற்பட்டிருக்கின்றது. ஆகவே மக்கள் விரும்பும் மாற்றத்தை அவர் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
புதிய அரசின் மீதான மக்கள் நம்பிக்கை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பிரபல நடிகர் விஜய் இன்றைக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். அவருக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்துக் கொள்கின்றோம்.

அதேபோன்று, அவர் தொடர்பில் மக்கள் மத்தியில் ஒரு புதிய நம்பிக்கை ஏற்பட்டிருக்கின்றது. அங்கிருக்கின்ற ஊழல் மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் இவைகள் எல்லாம் ஒழிக்கப்பட வேண்டும் என்பது மக்களுடைய விருப்பம். புதிய மாற்றம் ஒன்றை எதிர்பார்த்தே மக்கள் அவருக்கு வாக்களித்துள்ளனர் என்பதே உண்மை.
அந்த வகையில் மாற்றத்தை விரும்பி வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு எங்களுடைய நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்திய கடற்றொழிலாளர்கள் கைது
இந்திய கடற்றொழிலாளர்கள் இன்றைக்கு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றார்கள். அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற இந்திய கடற்றொழிலாளர்களை விடுவிப்பதற்கான ராஜதந்திர நடவடிக்கைகளை எடுக்கப்பட வேண்டும்.
அண்மையில் கூட இந்தியாவின் கேரளா பகுதியில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்களை இந்தியாவே கைது செய்து இருக்கின்றது.

அவ்வாறிருக்கையில், அத்துமீறி இலங்கை கடற்பரப்புக்குள் தடை செய்யப்பட்ட இழுவை மடி படகுகளை பயன்படுத்தி இலங்கை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் கடற்றொழிலில் ஈடுபடுவது ஒரு நாட்டின் இறையாண்மைக்கும் சட்ட திட்டங்களுக்கும் குற்றமாக கருதப்படும் காரணத்தினால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய இலங்கை கடற்றொழிலாளர்கள் விடயம் தொடர்பாக மிக விரைவில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் நேரடியாக இலங்கை கடற்றொழில் அமைச்சோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
எதிர்க்கட்சியாக இருக்கின்ற ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ளவர்களுக்கு கொள்கை கிடையாது, கோட்பாடு கிடையாது, வேலை திட்டமும் கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை விட்டு வெளியேறும் மருத்துவ நிபுணர்கள்! இலங்கைக்கு பேரிடியாகும் நிலைமை - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை