இஸ்ரேலிய இராணுவத்தின் தாக்குதல்கள்: நான்கு மருத்துவமனைகளை மூடிய லெபனான்
இஸ்ரேலிய தாக்குதல்கள் காரணமாக, லெபனானில் அமைந்துள்ள குறைந்தது நான்கு மருத்துவமனைகள் தமது பணிகளை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளன.
அதேநேரத்தில், ஹிஸ்புல்லாஹ்வுடன் இணைந்த சுகாதார அமைப்பு ஒன்று, கடந்த 24 மணி நேரத்தில் 11 துணை மருத்துவர்கள், இஸ்ரேலிய தாக்குதல்களால் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளது.
இந்தநிலையில், ஹிஸ்புல்லாஹ் போராளிகள், மருத்துவ வாகனங்களைப் பயன்படுத்தி போராளிகள் மற்றும் ஆயுதங்களைக் கொண்டு செல்வதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியிருந்தது.
இஸ்ரேலின் எச்சரிக்கை
எனவே, இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் எந்தவொரு வாகனத்தின் மீதும் தாம் தாக்குதல் நடத்தப்போவதாக இஸ்ரேல் எச்சரித்திருந்தது.
இதனையடுத்து, தென் லெபனானில் உள்ள அரச மருத்துவமனையின் நுழைவாயிலில் இரண்டு அவசர சேவை வாகனங்கள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 7 துணை மருத்துவர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று அந்த மருத்துவமனையின் பணிப்பாளர் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியில் உள்ள புனித தெரேஸ் மருத்துவமனையும் தாக்குதலில் சேதமடைந்ததை அடுத்து, அனைத்து சேவைகளையும் நிறுத்தியுள்ளது. அத்துடன் பின்ட் ஜபீலில் உள்ள சலா கந்தூர் மருத்துவமனையும், எறிகனைத் தாக்குதல்கள் காரணமாக, மூடப்பட்டுள்ளது.
எனினும், ஹிஸ்புல்லாஹ் போராளிகளால் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி மருத்துவமனையை அண்டிய மசூதியை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.
இஸ்ரேலிய இராணுவம்
இதேவேளை, மத்திய பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லாஹ்வுடன் தொடர்புடைய இஸ்லாமிய சுகாதார அமைப்புக்கு சொந்தமான மருத்துவ மையத்தை இஸ்ரேல் தாக்கியுள்ளது.
இதில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். மற்றும் 14 பேர் காயமடைந்தனர். எனினும், தமது தாக்குதல் பயங்கரவாத சொத்துக்களை குறிவைத்ததாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.
இதற்கிடையில் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வெளியிட்டுள்ள தகவலில், லெபனானில் கடந்த 24 மணி நேரத்தில் 28 சுகாதாரப் பணியாளர்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
லெபனானின் சுகாதார அமைச்சர் ஃபிராஸ் அபியாட் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த ஒக்டோபரில் ஹிஸ்புல்லாஹ்வும் இஸ்ரேலும் சண்டையிட ஆரம்பித்ததில் இருந்து 97 மீட்புப் பணியாளர்கள் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
அவர்களில் 40க்கும் மேற்பட்ட, துணை மருத்துவர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள், இந்த வாரத்தின் இறுதி மூன்று நாட்களில் கொல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜேவிபி மீதான தடையை நீக்கினார் வலதுசாரி ஜே.ஆர்! விடுதலை புலிகள் மீதான தடையை நீக்குவாரா இடதுசாரி அநுர?
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |