விடுமுறை சுற்றறிக்கையையும் புறக்கணித்து மின்சார சபை ஊழியா்கள் போராட்டம்
அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளை இரத்துச் செய்து, இலங்கை மின்சார சபையினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை புறக்கணித்து, சுகயீன விடுமுறைக்கு விண்ணப்பித்த பின்னர் நாளை கொழும்பில் ஒன்றுகூடுவதற்கு இலங்கை மின்சார சபையின் ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் கருத்துரைத்த அவர், நாளை நடக்கவிருப்பது பணிப்புறக்கணிப்பு அல்ல, போராட்டம் என்று குறிப்பிட்டாா்.
ஆர்ப்பாட்டத்திற்காக கொழும்பில் உள்ள ஊழியா்கள் செல்வதன் காரணமாக, எந்தவிதமான மின்சார முறிவுகளையும் சீரமைக்க, தாமதம் ஏற்படலாம். நாளை கண்டிப்பாக பிரசாரம் மேற்கொள்ளப்படும்.
பணிப்புறக்கணிப்பு தொடா்பில் நாளை அறிவிக்கப்படும் என ஜெயலால் கூறினாா். அனைத்து மின்சார சபை ஊழியர்களும், சபையின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்து வரப்படவுள்ளனா்.
மேலும், பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் துறைமுக மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக இரண்டு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனா்.
எரிபொருள் விநியோகம் மற்றும் துறைமுகங்களை அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
எனினும், அந்த அறிவிப்பில் இலங்கை மின்சார சபை இன்றியமையாத சேவையாக அறிவிக்கப்படவில்லை.
இதனை ஆட்சியாளா்கள் தவறுதலாக மறந்திருக்கலாம் என்று அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தொிவித்தாா்