பாரதூரமான சிக்கலை எதிர்நோக்கும் ஸ்ரீலங்கன் விமான சேவை
குத்தகை அடிப்படையில் ஸ்ரீலங்கன் விமான சேவை பெற்றுக்கொண்டுள்ள 25 விமானங்களுக்கான கடன் மற்றும் வட்டியை செலுத்த முடியாது அந்த நிறுவனம் நெருக்கடியான நிலைமையை எதிர்நோக்கி வருகிறது.
இலங்கை வெளிநாடுகளுடன் கொண்டுள்ள பல்வேறு கடன் உடன்படிக்கைகளுக்கு அமைய செலுத்த வேண்டிய கடன் மற்றும் தவணைகளை செலுத்துவதை இலங்கை மத்திய வங்கி தற்காலிகமாக நிறுத்தியுள்ளதன் காரணமாகவே ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு இந்த நிலைமை உருவாகியுள்ளது.
உலக புகழ்பெற்ற நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய கடன் மற்றும் வட்டி
குத்தகை நிறுவனங்களுக்கு முழுமையான உரிமை கிடைக்கும் வகையிலான நிபந்தனையின் கீழ் 25 விமானங்கள் குத்தகைக்கு பெறப்படடுள்ளன.
உலக புகழ்பெற்ற விமான குத்தகை நிறுவனங்களான எயார் கெப் லீசிங் நிறுவனம், எயர் லீசிங் கோப்பரேஷன் மற்றும் எவலோன் லீசிங் நிறுவனம் உட்பட பல நாடுகளில் உள்ள குத்தகை நிறுவனங்கள் ஊடாக இந்த 25 விமானங்களை ஸ்ரீலங்கன் விமான சேவை பெற்றுக்கொண்டுள்ளது.
வெளிநாடுகளில் குத்தகை நிறுவனங்கள் விமானங்களை கைப்பற்றலாம்
இந்த குத்தகை நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தவணை முறையாக செலுத்தவில்லை என்றால், விமானங்கள் இலங்கையில் அல்லது வெளிநாடுகளில் நீதிமன்ற தடையுத்தரவின் கீழ், அவற்றினை குத்தகை நிறுவனங்கள் மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும்.
குத்தகை செலுத்தாத பிரச்சினை காரணமாக அண்மையில் ரஷ்ய விமானம் ஒன்று இலங்கையின் நீதிமன்ற தடையுத்தரவின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டது.
ஸ்ரீலங்கன் விமானங்களுக்கு இப்படியான பிரச்சினை ஏற்பட்டால், அது முழு விமான சேவைக்கும் பாரதூரமான சிக்கலாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் விமான சேவையிடம் இருக்கும் 25 விமானங்களும் குத்தகை உடன்படிக்கைகளின் கீழ் இருப்பதால், நிலைமை மேலும் மோசமடையும் என விமான சேவையின் தகவல்கள் கூறுகின்றன.