சீனாவுக்கு விரைந்த இலங்கையின் முக்கிய தலைவர்கள்: அமெரிக்கா- இந்தியாவுக்கு சிக்கலா...!
ஆசியாவில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், இலங்கையின் ஆளும் கூட்டணியின் 15 தலைவர்கள் சீனாவுக்குச் சென்றுள்ளனர்.
நேற்றைய தினம் (23.04.2023) சென்றுள்ள இக்குழுவில் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில் இவர்கள் அங்கு சென்றுள்ளனர். இந்த வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இலங்கை அரசியல் கட்சியினர்
சீனாவுக்குச் சென்ற குழுவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியின் ஐந்து உறுப்பினர்கள் உள்ளடங்குகின்றனர்.
10 உறுப்பினர்கள் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனயை சேர்ந்தவர்களாவர்.
மேலும், இந்த உறுப்பினர்களில் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சவின் உறவினரான நிபுண ரணவக்கவும் ஒருவராவார்.
இந்த இலங்கை அரசியல் கட்சியினர் ஒன்பது நாட்கள் சீனாவில் தங்கியிருப்பர் என்று கூறப்படுகிறது. இதன்போது அவர் சீனாவின் இரண்டு மாநிலங்களுக்குச் செல்லவுள்ளனர்.
15 பேர் கொண்ட குழு
இத்தகைய விஜயர்களின்போது, சீனா தனது முன்னேற்றத்தையும் அதன் சிறப்புத் திட்டங்களின் வெற்றியையும் அரசியல்வாதிகள், செய்தியாளர் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு எடுத்துக் காட்டுகிறது.
இந்தநிலையில், சீனா சென்றுள்ள 15 பேர் கொண்ட குழுவில் இளம் அரசியல்வாதிகள் பலர் அடுத்த தேர்தலில் பங்கேற்கத் தயாராகி வருகின்றனர் என்றும் இணைத்தளம் குறிப்பிட்டுள்ளது.
குன்மிங் மற்றும் யுனான் மாகாணங்களுக்கு இலங்கை அணி பயணம் செய்யவுள்ளது. மாகாண தலைநகரங்களில் உள்ள இலங்கைப் பிரதிநிதிகள் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
இந்தியா - அமெரிக்கா
சீனாவின் நன்கு அறியப்பட்ட வறுமை ஒழிப்பு மற்றும் கிராமப்புற மறுமலர்ச்சி திட்டங்கள் குறித்த கருத்தரங்கிலும் குழு பங்கேற்கும். குழு உறுப்பினர்கள் பல மாதிரி கிராமங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்து அங்கு நவீன விவசாய முறைகளை அவர்கள் கண்காணிக்கவுள்ளனர்.
பயணத்தின் இறுதிக்கட்டத்தில், தூதுக்குழுவினர் ஃபுஜியான் மாகாணத்திற்கும், அதன்பின் தலைநகர் பீய்ஜிங்கிற்கும் பயணம் மேற்கொள்வார்கள்.
இந்த விஜயம் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் கவலையை ஏற்படுத்தலாம் என அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளதாக இணைத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
நிபுணர்களின் கூற்றுப்படி, இலங்கையில் இருந்து வருவோரைச் சீனா தனது
சாதனைகளைக் காட்டி ஈர்க்க விரும்புகிறது என்பது இந்த பயண நிகழ்ச்சி நிரலில்
இருந்து தெளிவாகிறது என்றும் இணைத்தளம் குறிப்பிட்டுள்ளது.