'டித்வா' பாதிப்பு:சட்டத்தரணியால் அடிப்படை உரிமை மனுத் தாக்கல்
'டித்வா' சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கண்டி சட்டத்தரணி ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையிலான தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம், அமைச்சுக்கள் மற்றும் அரச அதிகாரிகள் பேரிடரின் போது தங்கள் கடமைகள் மற்றும் தனது வகிபாகங்களை மீறியதாக தீர்ப்பளிக்குமாறு அவர் நீதிமன்றத்தை கோரியுள்ளார்.
மனுவின் பிரதிவாதிகள்
சட்டத்தரணி கே.எம். கீர்த்தி பண்டார கிரிதன,தனது மனுவின் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம், அமைச்சரவை, தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலைய சிரேஷ்ட அதிகாரிகள், நீர்ப்பாசனத் துறை, வலிமண்டலவியல் திணைக்களம், கண்டி மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட நிர்வாகம்- பொலிஸ் அதிகாரிகள் உட்பட 37 பேரை குறிப்பிட்டுள்ளார்.

அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,கண்டி நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் அமைந்துள்ள கண்டி சட்டத்தரணிகள் வளாகத்தில் உள்ள தனது அலுவலகம் வெள்ளத்தால் முற்றிலுமாக சேதமடைந்ததாகவும், அதனால் ரூ. 800,000 க்கும் அதிகமான சேதம் ஏற்பட்டதாகவும், தனது தொழில்முறை கடமைகளைச் செய்யத் தேவையான தனது கணினியும் தேசமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.