பட்டலந்த அறிக்கை குறித்து அரசாங்கத்தின் தீர்மானம்
பட்டலந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை குறித்து சட்ட நடைமுறையாக்க நிறுவனங்களே தீர்மானிக்கும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayathissa) தெரிவித்துள்ளார்.
இன்று (18) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த மாநாட்டில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், “பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் தெளிவாகத் தெரிவித்திருக்கின்றோம்.
பட்டலந்த அறிக்கை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று அல் ஜசீரா நேர்காணலில் தெரிவித்திருந்ததுடன் அது செல்லுபடியாகாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
எனவே, மும்மொழிகளிலும் அந்த அறிக்கையை நாம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கின்றோம்.
பட்டலந்த வீடமைப்பு திட்டம், சட்ட விரோதமாக தடுத்து வைத்தல் பிரதேசம் மற்றும் வதை முகாம் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
சட்ட நடைமுறையாக்க நிறுவனம்
இந்த அறிக்கையிலுள்ள காரணிகள் தொடர்பில் மேலும் ஆழமாக மதிப்பாய்வு செய்து பரிந்துரைகளை வழங்குவதற்காக குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.
மேலும் இவ்வறிக்கை சட்டமா அதிபருக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது. ஜனாதிபதியால் நியமிக்கப்படவுள்ள குழுவின் பரிந்துரைகள் மற்றும் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
எனவே, பட்டலந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கையை அரசாங்கம் தீர்மானிக்கப் போவதில்லை. மாறாக சட்ட நடைமுறையாக்க நிறுவனங்களே அதனைத் தீர்மானிக்கும் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |