கண்டியில் மூத்த ஊடகவியலாளரின் இரு நூல்கள் வெளியீட்டு நிகழ்வு
மூத்த ஊடகவியலாளரும் எழுத்தாளருமான கவிஞர் இக்பால் அலி எழுதிய இரு நூல்கள் அக்குறணை ஐடெக் கல்வி நிலைய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
குறித்த வெளியீட்டு நிகழ்வானது நாளை (23.05.2024) வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
வெளியிடப்படவுள்ள இரு நூல்களும் திறன் நோக்கு கட்டுரைத் தொகுதி மற்றும் சிறுவர்களுக்கான பாடல்கள் என்ற இரு உள்ளடக்கத் தலைப்புகளை கொண்டதாக அமைந்துள்ளன.
நூல் வெளியீடு
இக்பால் அலி நீண்ட ஊடக கள அனுபவங்களை தன்னகத்தே கொண்டுள்ளதோடு சிறந்த கவிஞர் மற்றும் நூல் விமர்சகரும் ஆவார்.
இவரது காலத்தின் கால்கள், குரங்குத் தம்பி ஆகிய இரு நூல்களில், காலத்தின் கால்கள் நூல் திறன் நோக்கு கட்டுரைத் தொகுதியாகவும் குரங்குத் தம்பி சிறுவர் பாடல்களாகவும் அமைந்துள்ளது.
ஊடகவியலாளர் இக்பால் அலியின் இரு நூல் வெளியீட்டு நிகழ்வின் முதன்மை விருந்தினர்களாக கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமும், நாடாளுமன்ற உறுப்பினரும் கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளருமான எம். எச். ஏ. ஹலீம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
நிகழ்வின் உரைகள்
இந்நிகழ்வில் கண்டி மக்கள் கலை இலக்கிய ஒன்றியத்தின் தலைவர் அ. இராமன் வரவேற்புரையினையும், மத்திய மாகாண முன்னாள் முதல் அமைச்சர், வட மத்திய மாகாண முன்னாள் ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் முன்னாள் தேசியத் தலைவர் சஹீட் எம். ரிஸ்மி, மனித அபிவிருத்தி ஸ்தாபன இயக்குநர், சர்வதேச விவசாய நிறுவனத்தின் செயலாளர் நாயகம் பி. பி. சிவப்பிரகாசம் வாழ்த்துரையாற்றவுள்ளனர்.
எம். எஸ். எம். அனஸ் நூல்கள் பற்றிய அறிமுகத்தையும், பேராதனை பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத்துறை முன்னாள் விரிவுரையாளர் ரா. நித்தியானந்தன் மற்றும் கண்டி திரித்துவக் கல்லூரி சிரேஸ்ட ஆசிரியர் சர்மிளாதேவி, துரைசிங்கம் ஆகிய இருவரும் நூல் நயவுரையினை வழங்க உள்ளனர்.
மேலும் நூலாசிரியர் இக்பால் அலி ஏற்புரையினையும், அக்குறணை பிரதேச செயலகத்தின் மொழிபெயர்ப்பாளர் பீ. தாரீக் நன்றியுரையினையும் நிகழ்த்தவுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |