யாழில் அதிகரிக்கும் டெங்கு நோய் தாக்கம்: பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
யாழ். மாவட்டத்தில் கடந்த வருடம் 4269 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று(01.01.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதனை கூறியுள்ளார்.
டெங்கு நோயாளிகள்
மேலும் தெரிவிக்கையில்,
”கடந்த மாதம் டிசம்பரில் அதிகளவில் டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த வருடம் 2505 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதத்தில் மாத்திரம் 3 மரணங்கள் பதிவாகியுள்ளது. 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டில் ஆயிரம் பேர் வரையானோருக்கு அதிகமாக டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதம் பெய்த தொடர்ச்சியான மழை காரணமாக டெங்கு பரவல் அதிகரித்தது.
யாழ்ப்பாணம், நல்லூர் கோப்பாய், சண்டிலிப்பாய் ஆகிய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இடங்களில் டெங்கு நூளம்பின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றன.
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் தங்கள் உடல்நிலை தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும்.
எனவே பொதுமக்கள் தங்கள் சார்ந்த இடங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் யாழ். மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் அதிகம் காணப்படுகின்ற நான்கு பிரதேச செயலக பிரிவில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரை பயன்படுத்தி டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ் நகரம், நல்லூர், கோப்பாய் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளில் அதிகளவானவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேற்படி பகுதிகளில் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில்
வடமாகாண பிரதம செயலாளர் தலைமையில் நடைபெற்ற நான்கு பிரதேச செயலாளர்
பிரிவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் படி நேற்று (01) முதல் சிரமதான
பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |