அதிகவட்டியில் பிணைமுறி கடன்களை பெரும் அரசாங்கம் - பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள தாக்கம்
2026 மே மாத இறுதியில் நடத்தப்பட்ட திறைசேரி உண்டியல்கள் மற்றும் பிணைமுறி ஏலங்களில் வட்டி விகிதங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன.
91 நாட்கள், 182 நாட்கள் மற்றும் 364 நாட்கள் ஆகிய அனைத்து முதிர்வுக்காலங்களுக்கும், முந்தைய ஏலத்துடன் ஒப்பிடுகையில் சராசரி வட்டி வருமான விகிதம் 8.18% – 8.49% என்ற மட்டத்திலிருந்து 9.36% – 9.83% வரை அதிகரித்துள்ளது.
முதிர்வடையும் பிணைமுறி
5, 12 மற்றும் 20 ஆண்டுகளில் முதிர்வடையும் பிணைமுறிகளுக்கான கூப்பன் விகிதங்களை விட முறையே 11.86%, 12.32% மற்றும் 12.93% போன்ற உயர் சராசரி வட்டி வருவாய் விகிதங்கள் பதிவாகியுள்ளன.

அரசாங்க கடன் முகாமைத்துவ அலுவலகத்தின் உத்தியோகபூர்வ தரவுகளின்படி, மேற்கண்ட விபரங்கள் வெளியாகியுள்ளன.
திறைசேரி உண்டியல்களும் பிணைமுறிகளும் அரசாங்கம் தனது வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக உள்நாட்டில் நிதியைக் கடனாகப் பெறும் முக்கிய கருவிகளாகும்.
வட்டி விகிதங்கள் அதிகரிப்பதன் அர்த்தம், அரசாங்கம் இக்கடன்களுக்காக செலுத்த வேண்டிய வட்டிச் செலவு அதிகரிப்பதாகும். இது அரசாங்கத்தின் நடப்புச் செலவுகளை அதிகரிப்பதுடன், நாட்டின் கடன் சுமையை மேலும் தீவிரமடையச் செய்யக்கூடும்.
திறைசேரி உண்டியல் மற்றும் பிணைமுறி விகிதங்கள் என்பன ஒட்டுமொத்த நிதி அமைப்பினதும் 'அபாயமற்ற' (Risk-free) அடிப்படை அளவுகோலாகும்.
வைப்புத்தொகை மற்றும் கடன் வட்டி விகித அதிகரிப்பு
இவற்றின் வட்டி அதிகரிக்கும் போது, வர்த்தக வங்கிகளும் ஏனைய நிதி நிறுவனங்களும் தங்களது வைப்புத்தொகை மற்றும் கடன் வட்டி விகிதங்களை அதிகரிக்கத் தூண்டப்படுகின்றன.
வங்கி கடன் வட்டி விகிதங்கள் அதிகரிப்பதன் காரணமாக, வர்த்தகர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் புதிய முதலீடுகளுக்காகக் கடன்களைப் பெறுவது அதிக செலவுமிக்க ஒரு காரணியாக மாறுகிறது.

அத்துடன், வர்த்தக வங்கிகள் அதிக அபாயம் கொண்ட தனியார் துறைக்குக் கடன் வழங்குவதை விடுத்து, அதிக வட்டி கிடைக்கக்கூடிய, அபாயமற்ற அரசாங்கப் பத்திரங்களில் பணத்தை முதலீடு செய்ய முனைகின்றன.
இதனால் தனியார் துறைக்குக் கிடைக்கும் கடன்களின் அளவு மட்டுப்படுத்தப்படுகிறது. அரசாங்கப் பத்திரங்கள் (உண்டியல்கள் மற்றும் பிணைமுறிகள்) மூலம் 9% – 12% போன்ற உயர்வான, நிலையான மற்றும் அபாயமற்ற வருமானம் கிடைக்கும் போது, முதலீட்டாளர்கள் அதிக அபாயம் கொண்ட பங்குச் சந்தையிலிருந்து தங்களது பணத்தைத் திரும்பப் பெற்று, அரசாங்கப் பத்திரங்களை நோக்கி நகர்கின்றனர்.
இதனால் பங்குச்சந்தை விலைச்சுட்டிகள் வீழ்ச்சியடையக்கூடும். உயர் வட்டி விகிதங்கள் காரணமாக வர்த்தக முதலீடுகள் மட்டுப்படுத்தப்படுவதுடன், பொது மக்கள் கடன் அடிப்படையில் வாகனங்கள், வீட்டுக்கடன்கள் உள்ளிட்ட நுகர்வுப் பொருட்களை கொள்வனவு செய்வதைக் குறைத்துக் கொள்கின்றனர்.
முதலீடு மற்றும் நுகர்வு ஆகிய இரண்டும் வீழ்ச்சியடைவது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) வளர்ச்சி மந்தமடைவதற்கு நேரடியாகப் பங்களிக்கிறது.