ஆபிரிக்காவில் கிளர்ச்சி படையின் தாக்குதலை முறியடித்த இலங்கை படையினர்:விமானப்படை தகவல்
மத்திய ஆபிரிக்காவில் ஐக்கிய நாடுகள் அமைதிப்படையில் கடமையாற்றி வரும் இலங்கை விமானப்படையின் உலங்குவானூர்தி படையணி, மத்திய ஆபிரிக்க குடியரசில் அந்த நாட்டு படையினருக்கு எதிராக கிளர்ச்சி படையினர் நடத்திய தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்துள்ளனர் என விமானப்படை தெரிவித்துள்ளது.
மத்திய ஆபிரிக்க குடியரசு இராணுவத்திற்கு எதிராக அந்நாட்டில் இயங்கும் கிளர்ச்சி படை தாக்குதலை நடத்தியுள்ளது.
இலங்கை விமானப்படையினருக்கு பாராட்டு பத்திரம்
அந்த தாக்குதலை வெற்றிகரமாக முறியடிக்க ஐ.நா அமைதிப்படையில் கடமையாற்றும் இலங்கை விமானப்படையின் உலங்குவானூர்தி படையணி ஆபிரிக்க குடியரசு படையினருக்கு உதவியதை அந்நாட்டுக்கான ஐ.நா அமைதிப்படையின் தளபதி லெப்டினட் ஜெனரல் டேனியல் சிட்டிகி பாராட்டி சான்றிதழை வழங்கியுள்ளதாக இலங்கை விமானப்படை கூறியுள்ளது.
தாக்குதலின் போது இலங்கை விமானப்படையின் உலங்குவானூர்தி படையணியினர் இரண்டு உலங்குவானூர்திகளை பயன்படுத்தி, தரையில் இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்ட படையினருக்கு உதவி, வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பின்வாங்கிய கிளர்ச்சி படையினர்
இந்த தாக்குதலில் கிளர்ச்சி படையினர் பிரதேசத்தில் இருந்து பின்வாங்கி சென்றுள்ளதுடன் மத்திய ஆபிரிக்க குடியரசு படையினர் பிரதேசத்தை கைப்பற்றியுள்ளனர்.
இலங்கை விமானப்படையினரை ஐக்கிய நாடுகள் அமைதிப்படையில் கடமையில் ஈடுபடுத்தி இதுவரை இலங்கைக்கு சுமார் 100 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொடுத்துள்ளதாக இலங்கை விமானப்படையின் பேச்சாளர் குறுப் கெப்டன் துஷான் விஜேசிங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.