உலக இளையோர் தடகள செம்பியன்சிப் போட்டியில் பங்கேற்கமுடியாத சிக்கலில் இலங்கை வீரர்கள்
இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சு கடைசி நிமிடத்தில் நிதியுதவியை திரும்பப் பெற்றதன் காரணமாக, 2024 ஆம் ஆண்டு பெரு நாட்டின் லிமாவில் நடைபெறவுள்ள உலக இளையோர் தடகள செம்பியன்சிப் போட்டிகளில், இலங்கையைச் சேர்ந்த 12 இளைய தடகள வீரர்கள் பங்கேற்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சகம், திடீர் நிதிப் பற்றாக்குறையை மேற்கோள் காட்டியதன் காரணமாக, விளையாட்டு வீரர்களுக்கு பயணம் மற்றும் தங்குமிடம் என்பவற்றை பெற்றுக்கொள்வதில் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன.
செம்பியன்சிப் போட்டி
2024 ஆகஸ்ட் 27ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை திட்டமிடப்பட்டுள்ள உலக இளையோர் தடகள செம்பியன்சிப் களத்தை பொறுத்தவரை, இலங்கையின் இளம் விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச அரங்கில் போட்டியிட ஒரு முக்கிய வாய்ப்பாக அமைந்துள்ளது.
பதினோராவது மணி நேரத்தில் அமைச்சகத்தின் இந்த திடீர் அறிவிப்பு வெளியிடப்பட்டமையால் மாற்று தீர்வுகள் அல்லது தனியார் அனுசரணையாளர்களை நாடுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்பியன்சிப் போட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், விமானங்கள் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இந்த 12 விளையாட்டு வீரர்கள் உலக அரங்கில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வேகமாக குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஜனாதிபதி நிதியில் இருந்து நிதி ஒதுக்குவது குறித்து பரிசீலிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சை பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதியிடம் கோரப்பட்டுள்ளது.
எனவே அவர் இதற்கு ஒப்புதல் வழங்குவார் என்று எதிர்பார்ப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.