இலங்கையின் வறுமை நிலைமை குறித்து உலக வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டில் வறியவர்களின் எண்ணிக்கை உக்கிரமடைய கூடும் என உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து மூன்று பில்லியன் டொலர்கள் கடன் பெற்றுக் கொள்ளும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விரிக்கப்பட்டுள்ளது.
ஐ.எம்.எப்பின் பரிந்துரைகள்
சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் வறியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் வறியவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்வடைந்துள்ளதாகவும், பண வீக்கம் மற்றும் வேலையில்லா பிரச்சினையால் இந்த நிலைமை உருவாகியுள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மோசமான பொருளாதார நிலைமை இந்த ஆண்டிலும், எதிர்வரும் 2024ம் ஆண்டிலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலக வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வறுமை நிலைமையில் அதிகரிப்பு
நகரப் பகுதிகளில் வறுமை நிலைமை மூன்று மடங்காக உயர்வடைந்துள்ளதாகவும் கிராமிய பகுதிகளில் வறுமை நிலைமை இரண்டு மடங்காக உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் சில ஆண்டுகளுக்கு நாட்டின் வறுமை நிலைமையானது 25 வீதத்தை விட அதிகமாக காணப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு 100 பேரில் 13 பேர் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்ந்து வந்ததுடன், கடந்த 2022ஆம் ஆண்டில் 100 பேரில் 25 பேர் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்ந்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் கடந்த ஆண்டில் பொருட்களின் விலைகள் 46 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
மேலும் வறுமையினால் பாதிக்கப்படக்கூடிய மக்களை அடையாளம் கண்டு தீர்வு வழங்கப்படாவிட்டால் பாரியளவில் நாட்டில் வறியோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.