உடனடியாக வெளியேறவும்..! தீவிரமடையும் கனமழையினால் அடுத்தடுத்து பதிவாகும் நிலச்சரிவுகள்
நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக இதுவரை சுமார் 35 சிறிய நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
இன்று (21) நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) சிரேஷ்ட புவியியலாளர் இமாயா அரியரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
நிலச்சரிவுகள் பதிவு
மேலும், இதுவரை கடுமையான நிலச்சரிவுகள் எதுவும் பதிவாகவில்லை என்றும், சிறிய சம்பவங்கள் மட்டுமே பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலச்சரிவு சம்பவங்கள் சிறியவையாக இருந்தாலும், தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அவை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் எச்சரித்துள்ளார்.
கடந்த மூன்று நாட்களில் மழைப்பொழிவு 300 மில்லிமீட்டரை தாண்டியுள்ளதாகவும், இந்த மழையின் தீவிரம் தொடர்ந்தால், நிலச்சரிவுகள், பாறை சரிவுகள், நிலம்தாழ்வது மற்றும் கூரைகள் இடிந்து விழுவது போன்ற ஆபத்துக்கள் ஏற்படக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உடனடியாக வெளியேறவும்
தற்போது 14 நிலச்சரிவு அபாயம் உள்ள மாவட்டங்களில், 6 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழைப்பொழிவின் தீவிரம் மேலும் அதிகரித்தால், நிலச்சரிவு சிவப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்படும் பகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே பொதுமக்கள் தங்கள் பகுதிக்குரிய எச்சரிக்கைகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
பிரதேச செயலகங்கள் மூலம் அதிக அபாயமுள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டு, வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்ட மக்கள், அந்த அறிவுறுத்தல்களின்படி உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற வேண்டும் என்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.