ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியின் பல இடங்களில் மண்சரிவு: வெள்ளத்தில் மூழ்கிய சில பகுதிகள்
நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியின் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், அவ்வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு பாதுகாப்புத் தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஹட்டன், கொட்டகலை, தலவாக்கலை மற்றும் நுவரெலியா உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று (09.11.2026) மாலை பெய்த கடும் மழையைத் தொடர்ந்து இந்த மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
மண்சரிவு
குடாகம பகுதியில், மல்லியைப்பூ சந்திக்கு அருகில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியூடான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டது.

இதனால், அவ்வீதியின் இருபுறங்களிலும் பல கிலோமீற்றர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதுடன், பயணிகள் மற்றும் சாரதிகள் சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாகப் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
இதனையடுத்து, இராணுவத்தினர், ஹட்டன் பொலிஸார் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் இணைந்து மேற்கொண்ட பல மணித்தியால போராட்டத்தின் பின்னர், வீதியின் ஒரு பகுதி போக்குவரத்திற்காகத் திறந்து விடப்பட்டது.

தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியின் பல இடங்களில் மண்சரிவு அபாயம் நிலவுவதுடன், சில பகுதிகளில் ஒருவழிப் போக்குவரத்து மாத்திரமே இடம்பெற்று வருகின்றது.
எனவே, இவ்வீதியைப் பயன்படுத்தும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறும், மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் தேவையற்ற விதத்தில் வாகனங்களை நிறுத்துவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் பாதுகாப்புத் தரப்பினர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

வெள்ளம்
ஹட்டன் ஓயா பெருக்கெடுத்ததைத் தொடர்ந்து பீலிஅத்தர பகுதி நேற்றைய தினம் (09.11.2026) முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இந்த திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக அப்பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.
இதனால் பாதிக்கப்பட்டு வீடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் தொடர்ச்சியாக நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

ஹட்டன் - டிக்கோயா நகர சபையின் உப தலைவர் மற்றும் நகர சபை உறுப்பினர்கள் இருவர் இணைந்து இந்த மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இப்பகுதியில் மேலும் பல அனர்த்தங்கள் பதிவாகியுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
