இலங்கையில் ஏற்படக்கூடிய ஆபத்து குறித்து எச்சரிக்கை
இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 30 சதவீதம் மண்சரிவு அபாயப் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த அபாயம், 14 மாவட்டங்களில் பரவி காணப்படும் மலைப்பாங்கான பகுதிகளை முக்கியமாகப் பாதிக்கக்கூடியதாகும்.
2023 ஆம் ஆண்டில், நாட்டின் முழுவதும் மண்சரிவு அபாய வரைபடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகள், மணல் மற்றும் மண் வழுக்கி செல்லும் பகுதிகள், மற்றும் அவை தேங்கக்கூடிய இடங்கள் ஆகியவற்றை அடையாளம் காணுவது மிக முக்கியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அபாய நிலையை கருத்தில் கொண்டு, " மண்சரிவு பாதிப்பு அபாயப் பகுதிகளை அடையாளம் காணும் திட்டம்" (சிவப்பு மற்றும் மஞ்சள் பகுதிகளை தீர்மானிக்கும் முறைமையை அடிப்படையாகக் கொண்டது) ஒன்றை செயல்படுத்துவதற்காக பாதுகாப்பு அமைச்சு முன்மொழிந்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி இடம்பெறும் மண்சரிவு பேரழிவுகளை கருத்தில் கொண்டு, இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.