எழுவைதீவில் தனியார் காணிகள் கடற்படையினருக்கு சுவீகரிப்பு!
யாழ்ப்பாணம் - எழுவைதீவில், தனியாருக்குச் சொந்தமான காணிகளை கடற்படையின் தேவைக்காக சுவீகரிப்பதற்கு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்தநிலையிலே, இதற்கான அளவீட்டுப் பணிகள் எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ளது.
எழுவைதீவில் ஜே/39 கிராம அலுவலர் பிரிவில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான 2 பரப்புக் காணியையும், அதேபோல் மூன்றாம் வட்டாரத்தில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான 53 பேர்ச் காணியையுமே கடற்படையினரின் தேவைக்காக அபகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அளவீட்டுப் பணிகள்
இதற்கான அளவீட்டுப் பணிகள் எதிர்வரும் 20ஆம், 21ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன என்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்தக் காணிகளை அபகரிப்பதற்கு, கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
எனினும், மக்களும் தமிழ்க் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளும் வெளிப்படுத்திய எதிர்ப்பால் அந்தப் பணிகள் கைவிடப்பட்டிருந்தன.
காணி சுவீகரிப்பு
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாளை யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து, பொங்கல் பண்டிகைகளில் கலந்து கொள்ளவுள்ளார்.

இதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்றுவரும் நிலையிலேயே, காணி சுவீகரிப்பு முயற்சிகளும் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.