தமிழ் மக்களின் நிலங்களை ஆக்கிரமிக்கும் வனவளத் திணைக்களம் : ரவிகரன் எம்.பி
கடந்த 2009ஆம் இற்கு முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகளால் பாதுகாக்கப்பட்ட தமிழ் மக்களின் பெருமளவான விவசாய மற்றும், குடியிருப்பு நிலங்களை தற்போது வனவளத் திணைக்களம் அபகரித்துள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் (T. Raviharan) சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு வனவளத் திணைக்களத்தால் அடாவடித்தனமாக அபகரிக்கப்பட்டுள்ள காணிகள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
வவுனியா (Vavuniya) வடக்கு பிரதேச செயலகப் பகுதிகளில் வனவளத் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணி விடுவிப்புத் தொடர்பில் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எல்லைக் கல்லிடும் பணி
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
வன்னிப் பகுதி மக்கள் கடந்த காலங்களில் இடம்பெயர்வைச் சந்தித்து மீள்குடியேறியது அனைவரும் அறிந்ததே. சில இடங்களில் குறிப்பிட்டளவு காலங்களுக்குள்ளும், சில பகுதிகளில் நீண்டகாலங்களுக்குப் பின்னரும் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டனர்.
இந்தநிலையில் மக்கள் இடப்பெயர்விற்கு முன்பதாக பயிர்செய்கையில் ஈடுபட்ட காணிகள் தற்போது பற்றைக்காடுகளாகக் காட்சியளிக்கின்றன.
தற்போது இவ்வாறு பற்றைக் காடுகளாகக் காட்சியளிக்கும் எமது மக்களுக்குரிய காணிகளுக்கு, எவ்வித முன்றிவிப்புக்களுமின்றி வனவளத் திணைக்களத்தினர் தற்போது எல்லைக்கல்லிடுகின்ற அடாவடித்தனமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தந்த மாவட்டசெயலருக்கோ, பிரதேசசெயலருக்கோ, கிராம அலுவலருக்கோ, காணிகளுக்குரிய மக்களுக்கோ அறிவிக்காமலேயே இவ்வாறு எல்லைக்கல்லிடும் பணிகளில் வனவளத் திணைக்களத்தினர் ஈடுபடுகின்றனர்.
அடாவடித்தனமான ஆக்கிரமிப்பு
பூர்வீகமாக பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு திறம்பட வாழ்ந்து வந்த எமது மக்களின் பயிர்ச்செய்கை நிலங்கள் இதில் அதிகமாக வனவளத் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. வனவளத் திணைக்களத்தின் அடாவடித்தனமான ஆக்கிரமிப்புத் தொடர்பில் ஒரு உதாரணத்தைச் சுட்டிக்காட்டலாமென நினைக்கின்றேன்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் வனவளத் திணைக்களத்திடம் 2,22006ஏக்கர், 2009ஆம் ஆண்டிற்குப் பின்னர் அடாவடித்தனமாக எமது மக்களின் காணிகளுக்கும் எல்லைக்கல்லிட்டு பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ளது.
அந்தவகையில் 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் எமது மக்களின் காணிகளை விடுதலைப் புலிகள் பாதுகாத்தனர். அவ்வாறு எமது மக்களின் காணிகளை விடுதலைப்புலிகள் பாதுகாத்ததால்தான் எமது மக்கள் நிறைவாகவும், சிறப்பாகவும் வாழ்ந்தார்கள். இவ்வாறு அபகரிக்கப்பட்ட மக்களின் காணிகள் விடுவிக்கப்படவேண்டுமென நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம்.
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசாங்கத்திடமும் இவ்வாறு அபகரிக்கப்பட்டுள்ள எமது மக்களின் காணிவிடுவிப்புத் தொடர்பில் தொடர்ந்தும் வலியுறுத்துவோம்.
தீர்வு காண நடவடிக்கை
நாட்டிற்கு காட்டுவளம் தேவைதான். அதற்காக நாட்டுக்கான ஒட்டுமொத்த காடையும் வன்னிக்குள் இருந்து உருவாக்கவேண்டுமென நினைத்தால் அது முற்றிலும் தவறான நிலைப்பாடாகும்.
வன்னியில் மக்களிடம் இருந்த காணிகள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும்.அவ்வாறு விடுவித்தாலே எமது மக்களால் தமது வாழ்வாதாரத்தைக்கொண்டு செல்ல முடியும். வன்னி மக்கள் சிறந்த உழைப்பாளர்கள். அவர்கள் உழைத்து வாழ்ந்த நிலங்களே இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
எனவே அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத்தலைவர் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவும் வனவளத் திணைக்களத்தின் இந்த அடாவடித்தனமான செயற்பாடுதொடர்பில் கவனமெடுக்கவேண்டும்.
ஜனாதிபதி, பிரதமர், வனவளத் திணைக்களத்தோடு தொடர்புடையவர்களுடனும் நாம் இணைந்து பேசி இந்த பிரச்சினைக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |