கேப்பாப்புலவு மக்களின் காணி விடுவிப்பு விவகாரம்.. தொடரும் 45ஆவது நாள் போராட்டம்
முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்புலவு பகுதியில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்ட்தை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த போராட்டம், இன்று (06.08.2026) இரண்டாவது கட்டத்தின் 45ஆவது நாளை எட்டியுள்ளது.
கேப்பாப்புலவு பகுதியில் இராணுவக் கட்டுப்பாட்டிலே உள்ள 55 குடும்பங்களுக்கு சொந்தமான 59.5 ஏக்கர் பூர்வீக வாழ்விடக் காணிகளை முதற்கட்டமாக விடுவிக்க கோரி தொடர் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
மீள் குடியேறுவதற்கான உரிமை
தமக்குச் சொந்தமான காணிகளை மீள ஒப்படைக்குமாறு வலியுறுத்தி, காணி உரிமையாளர்கள் தொடர்ச்சியாக அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

தமது பூர்வீக வாழ்விடங்களில் மீளக் குடியேறுவதற்கான உரிமையை உறுதிப்படுத்தி, காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதே அவர்களின் பிரதான கோரிக்கையாகும்.
இந்நிலையில், போராட்டம் 45ஆவது நாளைக் கடந்துள்ள போதிலும் இதுவரை அதிகாரிகளிடமிருந்து எவ்வித நிரந்தரத் தீர்வும் எட்டப்படாத நிலையில், போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.




