சீரற்ற நீர் விநியோகத்தால் கிளிநொச்சி மக்கள் கடும் அவதி : எழுந்துள்ள விசனம்
கிளிநொச்சியில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் விநியோகிக்கப்படுகின்ற குழாய் வழி குடிநீர் விநியோகம் சீரற்ற முறையில் இடம்பெறுவதனால் பொதுமக்கள் கடும் நெருக்கடிகளைச் சந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகள், தட்டுவன்கொட்டி, ஆனையிறவு, உமையாள்புரம் மற்றும் பூநகரி உள்ளிட்ட உவர் நிலப் பிரதேசங்களில் நிலத்தடி நீர் பயன்பாட்டுக்கு உகந்ததாக இல்லாததால், அப்பகுதி மக்கள் நீர் வழங்கல் சபையின் குடிநீர் விநியோகத்தையே முழுமையாக நம்பியுள்ளனர்.
நீர் விநியோகம் வழமைக்கு திரும்பி விடும்
இந்நிலையில் எவ்வித முன்னறிவிப்புமின்றி திடீரென நீர் விநியோகம் தடைப்படுவதாக அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறிப்பாக காலை வேளையில் பாடசாலைகள் மற்றும் அலுவலகங்களுக்குச் செல்லும் நேரங்களிலும், மாலை வேளையிலும் இவ்வாறு நீர் விநியோகம் நிறுத்தப்படுவதால் மாணவர்களும், உத்தியோகத்தர்களும் தங்களது நாளாந்தக் கடமைகளைச் சரிவரச் செய்ய முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக பூநகரி, தட்டுவன்கொட்டி போன்ற குடிநீர் பற்றாக்குறை நிலவும் பிரதேச மக்கள் இதனால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, கிளிநொச்சி நீர் வழங்கல் சபை இவ்விடயத்தில் உடனடியாகக் கவனம் செலுத்தி, எதிர்காலத்தில் சீரான நீர் விநியோகத்தை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும், குறித்த சில நாட்களில் நீர் விநியோகம் வழமைக்கு திரும்பி விடும் என கிளிநொச்சி மாவட்ட நீர் வழங்கல் சபையின் அதிகாரி தெரிவித்துள்ளார்.