அம்பாறை மாவட்டத்திலுள்ள காணிப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு : முஷாரப் எம்.பி உறுதி
அம்பாறை மாவட்டத்தில் பல தசாப்தங்களாகத் தீர்வின்றித் தொடரும் காணி அபகரிப்பு மற்றும் இனவாத அடிப்படையில் தடுக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்படாது பாழடைந்து கிடக்கும் நுரைச்சோலை வீட்டுத் திட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு மிக விரைவில் தீர்வு கிட்டும் என தான் உறுதியாக நம்புவதாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் தெரிவித்துள்ளார்.
காணி உரிமைகளுக்கான அம்பாறை மாவட்டச் செயலணியின் தொடர் நடவடிக்கைகள் பற்றிய பொறுப்புக் கூறல் மீளாய்வு சமர்ப்பணத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
காணிப் பிரச்சினைகள்
மேலும் தெரிவிக்கையில், “நான் ஊடகத்தில் பணியாற்றிய காலம் தொடக்கம் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டிருக்கும் இன்றுவரை அம்பாறை மாவட்டத்தில் உள்ள காணி ஆக்கிரமிப்பு, அபகரிப்பு பிரச்சினைகளின் தீர்வுக்காகத் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றேன்.
இப்பொழுது அம்பாறை மாவட்டத்தில் மக்கள் எதிர்கொள்ளும் காணிப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை எட்டும் காலம் வந்திருக்கின்றது.
கிட்டத்தட்ட திட்டமிட்ட நிலப்பறிப்புக்களால் அம்பாறை மாவட்டத்தில் உள்ள 12 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமாக சுமார் 5000 குடும்பங்களின் 16000 ஏக்கர் பரப்பளவான காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன.
பலர் பங்கேற்பு
இந்த நாடு உணவுப் பஞ்சத்திலும் பொருளாதார நெருக்கடியிலும் சிக்கித் தவிக்கும்போது மக்கள் பயிர் செய்த விவசாயக் காணிகளை வனவிலங்குகளுக்காகவும் வனத்திணைக்களத்துக்காகவும் தொல்பொருளுக்காகவும் புனித பூமிகளாகவும் மாற்ற சட்டம் பயன்படுத்தப்படுகிறதென்றால் இதைவிட அநியாயம் இருக்க முடியாது.
ஆனால் இந்த அநியாயங்களுக்கெல்லாம் இனித் தீர்வு கிட்டும் என்பதே கவலைகளுக்கு மத்தியிலுள்ள மகிழ்ச்சியான செய்தி” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கலந்துரையாடலில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் காணி மீட்பு நடவடிக்கைகளின் செயற்பாட்டாளர்கள், காணி இழந்தோர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், விவசாயிகள், துறைசார்ந்த செயற்பாட்டாளர்கள் ஆகியோர் பங்குபற்றியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |