கனிய மணல் அகழ்வு எனும் போர்வையில் இடம்பெறும் நில அபகரிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கொக்கிளாய் தொடக்கம் நாயாறு வரையான கிராமங்களில் கிராம மக்களின் சுமார் 1000 ஏக்கர் பூர்வீக நிலங்கள் கனிய மணல் அகழ்வு என்ற பெயரில் அபகரிக்கும் நடவடிக்கைகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.
ஏற்கனவே சிங்கள குடியேற்றங்களாலும் ,இராணுவ ஆக்கிரமிப்பாலும் மகாவலி எல் வலயத்தாலும் , வன ஜீவராசிகள் திணைக்களம் , வளவள திணைக்களம் , தொல்லியல் திணைக்களம் ,போன்ற அரச இயந்திரங்களின் திட்டமிட்ட ஆக்கிரமிப்பால் இருப்பு கேள்விக்குள்ளாகி வரும் தமிழ் மக்களின் எல்லை கிராமங்களில் மேலதிகமாக கனிய மணல் கூட்டுதாபனத்துக்கு என மிகுதி நிலங்களையும் அபகரிக்கும் வேலையை அரசு மிக திட்டமிட்டு முன்னெடுத்து வருகின்றது.
எனவே தமிழ் மக்களுக்கு சொந்தமான இந்த நிலங்களை அபகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொக்கிளாய் கிராம மக்களால் 12.02.2022 சனிக்கிழமை காலை 09.30 மணிக்கு கொக்கிளாய் பாடசாலை முன்பாக எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
எனவே அனைத்து தரப்பினரும் தமது போராட்டத்துக்கு ஆதரவு வழங்குமாறு கொக்கிளாய் எல்லை கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இன்று காலை முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய
கொக்கிளாய் எல்லை கிராம மக்கள் குறித்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.



