காணி ஆவணங்கள் வடக்கிலேயே இருக்க வேண்டும்! - மஸ்தான் எம்.பி
காணி ஆவணங்களை கையாளும் அலுவலகம் வடக்கில் இருப்பதே எனது விருப்பம், அதனை உரிய அமைச்சரிடம் வலியுறுத்தியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
வவுனியா - நெடுங்கேணியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறிப்பிடுகையில், எல்.ஆர்.சி. காணிக்குரிய ஆவணங்களே அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. அது கடந்த காலங்களிலும் அநுராதபுர பிராந்திய காரியாலயத்தால் தான் பார்க்கப்பட்டிருந்தது.
இரண்டு வருடங்களிற்கு முன்பாக எனது கோரிக்கைக்கு அமையவே வடமாகாணத்திற்கு வந்தது. மீண்டும் குறித்த விடயம் அவசரமாக அங்கு கொண்டு செல்லப்பட்டமை தொடர்பாக உரிய அமைச்சருடன் பேசியிருக்கிறேன்.
சில செயற்பாடுகளை இலகுவாகவும், அவசரமாகவும் செய்வது தொடர்பாக சில காரணங்கள் அவரால் சொல்லப்பட்டது. அது பொருத்தமில்லாத காரணம் என கூறியிருந்தேன்.
வடமாகாணத்திலேயே இந்த காரியாலயம் இருக்க வேண்டும் என்று எனது கோரிக்கையை வலியுறுத்தியிருக்கிறேன். இங்கு இருக்க வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பமும்.
எனவே மீண்டும் ஒருமுறை அமைச்சருடன் பேசவுள்ளேன் என தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த அரசாங்கத்தில் அபிவிருத்தி என்று பார்க்கும் போது வடக்கிற்கும் தெற்கும் ஒரே மாதிரியான நிதியையே ஒதுக்கி வருகின்றது.
வாக்குவீதங்கள் இங்கு பார்க்கப்படுவதில்லை. தெற்கில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலட்சக்கணக்கில் வாக்குகளை பெற்றுப்போனார்கள். எங்களுக்கோ குறைந்த விருப்புவாக்குக்கள். அவர்கள் எங்களிடம் நேரடியாக கேட்கிறார்கள் இலட்சக்கணக்கில் வாக்குகள் பெற்ற எமக்கும் வேலைவாய்ப்பில் 600 பேர் தான்.
மூவாயிரம் விருப்பு வாக்குகளை பெற்றவர்களிற்கும் 600 பேர் தான் என்று. இப்படி பல பிரச்சினைகள் இருக்கின்றன. வாக்குவீதத்திற்கு ஏற்றாற்போல அபிவிருத்தி செய்யுமாறு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்றார்கள்.
ஆனால் எமது தலைமை அதனை நிராகரித்துள்ளது.
பல சமூகங்கள் வாழ்கின்ற நாட்டில் உரிமை சார்ந்த பிரச்சனைகள் இருக்கின்றன. அதனை நசுக்கும் அளவிற்கு நாம் பார்த்து கொண்டிருக்க மாட்டோம். அனைத்தையும் பேசி தீர்மானிப்போம் என கூறியுள்ளார்.