வடமராட்சியில் காணி சுவீகரிப்பு முறியடிப்பு! பொலிஸார் குவிப்பு
யாழ்.வடமராட்சி பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கற்கோவளம் இராணுவ முகாமிற்கென தனியார் காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகள் முறியடிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இன்று இடம்பெறவிருந்த வேளை பலரது முயற்சியால் குறித்த நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இதன்போது சம்பவ இடத்திற்கு திரண்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சட்ட ஆலோசகர் ந.காண்டீபன், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் உட்பட்ட குழுவினர் நில அளவை மேற்கொள்ள வந்த நில அளவையாளர்கள் மற்றும் அதிகாரிகளை நில அளவை மேற்கொள்ளச் செல்லவிடாது வீதிக்குக் குறுக்கே இருந்து தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அத்துடன் குறித்த காணிகளை இராணுவத்திற்கு வழங்க விடமாட்டோம் என்று ஆதாரப்பூர்வமான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.
இப்போராட்டம் சுமார் ஒரு மணி நேரம் நீடித்த நிலையில் குறித்த காணியை இராணுவத்திற்கு வழங்கமாட்டோம் என பொது மக்கள் சார்பில் யாராவது தெரிவித்தால் தாம் திரும்பிச் செல்வதாக நில அளவை திணைக்கள அதிகாரி தெரிவித்துள்ளார்.
அதற்கு அமைவாக முன்னாள் நாடாளுமனர் உறுப்பினர் எம் கே. சிவாஜிலிங்கம் கடிதம் எழுதி நில அளவை துணைகொண்டு அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து நில அளவை திணைக்கள அதிகாரிகள் திரும்பிச் சென்ற நிலையில் குறித்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, போராட்ட இடத்தில் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் பொலிஸார் ஆயத்தங்களுடனும் சிவில் உடையிலும் குவிக்கப்பட்டிருந்தனர்.




