பிற்போடப்பட்டுள்ள யாழ். சர்வதேச விமான சேவைகள்: அதிகாரிகள் தெரிவிக்கும் காரணம்
யாழ். பலாலி விமான நிலையத்திற்கான விமான சேவைகளை நடத்துவதற்கு முன்வந்திருந்த தனியார் நிறுவனத்தின் வருமானம் தொடர்பான எதிர்பார்ப்புக்களே, திட்டமிட்டவாறு குறித்த விமான சேவைகள் ஆரம்பிக்கப்படாமைக்கு காரணம் என்று தெரியவருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விளக்கமளித்துள்ளார்.
மேலும், இதுதொடர்பாக மனம் வருந்துவதாக தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், பலாலி - திருச்சி, சென்னை விமான நிலையங்களுக்கு இடையில் விமான சேவையை ஆரம்பிப்பதற்கு தன்னாலான முயற்சிகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
யாழ். பலாலி சர்வதேச விமான நிலையத்தின் சேவைகளை மீள ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
யாழ். பலாலி விமான நிலையத்தில் இருந்து தமிழகத்துக்கான விமான சேவைகள் ஜுலை நேற்று(1) முதல் மீள ஆரம்பிக்கப்படும் என்று கடந்த மாதத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், இலங்கையில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி நிலைமையை கருத்தில்கொண்டு, அந்த விமான சேவைகளை மீள ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னணி
யாழ். பலாலி சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகள் 2019 ஆம் ஆண்டு நம்பர் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அங்கிருந்து தமிழகத்துக்கான விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மீண்டும் 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் அந்த சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில், தற்போது அந்த விமான சேவைகளை மீள ஆரம்பிப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்படி நேற்று தொடக்கம் அந்த சேவைகளை ஆரம்பிக்க அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
பிற்போடல் காரணம்
ஆனால், எரிபொருள் பிரச்சினை மற்றும் சட்ட சிக்கல்கள் காரணமாக அந்த நடவடிக்கைகளை பிற்போட நேர்ந்துள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.