லஹிரு வீரசேகரவுக்கு பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி
மாற்றத்திற்கான இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டாளர் லஹிரு வீரசேகர 2 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மாளிகாகந்த மேலதிக நீதவானால் இவ் உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காலிமுகத்திடல் போராட்டக்கள செயற்பாட்டாளரான லஹிரு வீரசேகர, கொழும்பு டுப்ளிகேஷன் வீதியில் வைத்து நேற்று (09) கைது செய்யப்பட்டார்.
முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்
மருதானையில் அண்மையில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை, முறையற்ற வகையில் ஒன்றுகூடிய அமைப்பின் உறுப்பினராக செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் லஹிரு வீரசேகர கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
வைத்தியசாலையில் அனுமதி
இன்று காலை வரை மருதானை பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டிருந்த லஹிரு வீரசேகர, திடீர் சுகயீனம் காரணமாக இன்று காலை சட்ட வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.