காலிமுகத்திடல் போராட்டத்தின் பின் கைதான லஹிரு வீரசேகர திடீரென வைத்தியசாலையில் அனுமதி
காலிமுகத்திடல் போராட்டத்தின் பின் கைது செய்யப்பட்ட லஹிரு வீரசேகர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திடீர் சுகயீனம் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
காலிமுகத்திடலில் நேற்று பிற்பகல் ஒன்று திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், உயிரிழந்தவர்கள் மற்றும் சிறையில் அடைக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து மெழுகுவர்த்தி ஏந்தி கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தியிருந்தனர்.
வீடு திரும்பும் வழியில் கைது
இதனை அடுத்து காலிமுகத்திடல் போராட்டத்தின் பின் வீடு திரும்பும் வழியில் லஹிரு வீரசேகர கொள்ளுப்பிட்டியில் வைத்து மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 30ஆம் திகதி மருதானையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாருக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் லஹிரு வீரசேகர கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
இந்த நிலையில் அவர் இன்று காலை சட்ட வைத்திய அதிகாரி முன் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.