பாக் ஜலசந்தி கடலில் ஒற்றை காலுடன் நீந்தி சாதித்த நீச்சல் வீராங்கனை
ஒரு காலை இழந்த மாற்றுத்திறனாளி நீச்சல் வீராங்கனை இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை 11 மணி 05 நிமிடங்களில் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார்.
தலைமன்னார் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி கடப்பதற்காக கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலத்தை சேர்ந்த 10 பேர் கொண்ட நீச்சல் வீரர்கள் குழு இந்திய-இலங்கை இரு நாட்டு அரசிடமும் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தனர்.
அனுமதி கிடைத்த நிலையில், நேற்று (18) இராமேஸ்வரம் கடற்றொழில் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடல் படகில் இலங்கை தலைமன்னார் நோக்கி சென்றனர். இந்த குழுவில் 8 பேர் ரிலே முறையில் நீந்தினர். இவர்கள் இலங்கை தலைமன்னாரில் இருந்து அதிகாலை 5.50க்கு கடலில் குதித்து நீந்த தொடங்கி மதியம் 2.20 மணி அளவில் தனுஷ்கோடி வந்தடைந்தனர்.
இவர்கள் ரிலே முறையில் தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை 8 மணி நேரம் 30 நிமிடத்தில் நீந்தி கடந்தனர். மேலும் இருவர் தனியாக (SOLO) நீந்தி கடந்தனர். இவர்கள் இருவரும் மாற்றுத்திறனாளிகள். இதில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சஷ்ருதி நக்காது என்ற நீச்சல் வீராங்கனைக்கு வலது காலில் பிறவி குறைபாடு காரணமாக மேல் மூட்டு துண்டிக்கப்பட்டு, செயற்கையாக வடிவமைக்கப்பட்ட காலை கொண்டு நடப்பவர்.
தொடர் சாதனைகள்
முன்னதாக பாரா நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு மூன்று பதக்கங்களை பெற்றுள்ள சஷ்ருதி நக்காது, தலைமன்னாரில் இருந்து இந்தியாவில் உள்ள தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை நீந்தி சாதனை புரிவதற்காக வெள்ளிக்கிழமை அதிகாலை 5.50 மணிஅளவில் தலைமன்னாரில் இருந்து கடலில் குதித்து நீந்த தொடங்கி மாலை 4.55 மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கரையை அடைந்தார்.
இந்த சாதனைக்காக 11 மணி 05 நிமிடங்கள் சஷ்ருதி நக்காது எடுத்துக் கொண்டார். அரிச்சல்முனை வந்தடைந்த சஷ்ருதி நக்காதுவை அவரது தாய் கண்ணீர் மல்ல முத்தமிட்டு வரவேற்றார்.
அதனை தொடர்ந்து சுங்கதுறை கண்காணிப்பாளர், மரைன் பொலிஸார் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதே போல மற்றொருவரான மாற்றுத்திறனாளி பல்கா கணேஷ் தலைமன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை 10 மணி 30 நிமிடத்தில் நீந்தி கடந்தார்.
மாற்றுத்திறனாளியான பாரா நீச்சல் வீராங்கனை தலைமன்னாரில் இருந்து இன்று (19) அதிகாலை கடலில் குதித்து நீந்த தொடங்கிய போது ஜெல்லி மீன் மற்றும் கடல் நீரோட்டம் காரணமாக தொடர்ந்து நீந்துவதில் கடும் சிரமம் ஏற்பட்டது. இருப்பினும் கடும் சிரமத்தை எதிர் கொண்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கரையை அடைந்து சஷ்ருதி நக்காது சாதனை படைத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








