போர்த்துக்கல் நாடாளுமன்றத்தில் தொழிலாளர் சீர்திருத்த மசோதா தோல்வி
போர்த்துக்கல் நாட்டில் கடந்த மே மாதம் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்ற வலதுசாரி சிறுபான்மை அரசாங்கத்திற்கு பெரும் பின்னடைவாக, அதன் புதிய தொழிலாளர் சீர்திருத்த மசோதாவை நாடாளுமன்றம் நிராகரித்துள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்கில் தொழிலாளர் சட்டத்தின் 100க்கும் மேற்பட்ட பிரிவுகளில் திருத்தங்களை மேற்கொள்ள பிரதமர் லூயிஸ் மோண்டினீக்ரோவின் அரசு முன்மொழிந்தது.
மசோதாவிற்கு எதிராக வாக்களித்ததால்
எனினும், இந்த சீர்திருத்தங்கள் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்து முதலாளிகளுக்கு சாதகமாக அமையும் எனக் கூறி, தொழிற்சங்கங்கள் கடந்த ஆறு மாதங்களில் இரண்டு பொது வேலைநிறுத்தங்களை நடத்தியிருந்தன.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற வாக்கெடுப்பில், ஆளும் கூட்டணியைச் சேர்ந்த 91 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் லிபரல் இனிஷியேட்டிவ் கட்சியின் 9 உறுப்பினர்கள் என மொத்தம் 100 பேர் மட்டுமே இந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
தீவிர வலதுசாரி கட்சியான 'சேகா' கட்சியின் 60 உறுப்பினர்களும், இடதுசாரி சோசலிஸ்ட் கட்சியின் 58 உறுப்பினர்களும் ஒன்றிணைந்து மசோதாவிற்கு எதிராக வாக்களித்ததால், 230 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் இந்த சீர்திருத்த மசோதா தோற்கடிக்கப்பட்டது.
போர்த்துக்கலின் தற்போதைய ஓய்வூதிய வயதான 66 ஆண்டுகள் 9 மாதங்கள் என்பதை 65 ஆகக் குறைக்க வேண்டும் என்ற சேகா கட்சியின் கோரிக்கையை அரசு ஏற்க மறுத்ததே, அக்கட்சி மசோதாவை எதிர்க்க முக்கியக் காரணமாக அமைந்தது.