குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனாருக்கு பொங்கல் விழா: விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
நீதிமன்ற அனுமதியுடன் குருந்தூர் மலையில் இடம்பெற இருக்கும் பொங்கல் நிகழ்வுக்கு அனைவரையும் வருமாறு ஆலய பொங்கல் உற்சவ குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் இம்மாதம்18ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு பொங்கல் நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் பொங்கல் உற்சவம் ஒன்றினை ஆதி சிவன் ஐயனார் ஆலயத்திலே செய்ய முற்பட்ட வேளை தொல்லியல் திணைக்களத்தினாலும், பெரும்பான்மையினராலும் தடுக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றிருந்தது.
வழக்கு தொடர்பான விபரம்
அது தொடர்பாக நகர்தல் பத்திரம் ஊடாக அந்த விடயத்தை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று கடந்த 08.08.2023 அன்று வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதில் அது தொடர்பாக பதிலளிப்பதற்காக தொல்லியல் திணைக்களத்திற்கு தவணை வழங்கப்பட்டிருந்தது.
அன்றையதினம் தொல்லியல் திணைக்களம், சட்டமா திணைக்களத்தினுடைய அரச சட்டத்தரணி ஊடாக தோன்றி தாம் எந்த விதத்திலும் அங்கே சைவ மக்கள் பொங்கல் செய்து வழிபட தடை செய்யவில்லை என்றும், எதிர்காலத்திலும் அவ்வாறான பொங்கல் நிகழ்வு நடைபெற்றால் அதற்கு பாதகமாக நடக்க மாட்டோம் என்றும் கூறியிருந்தார்கள்.
இதவேளை எதிர்வரும் 18.08.2023 அன்றையதினம் குருந்தூர்மலை ஆதி சிவன் ஐயனார் ஆலயத்தில் பொங்கல் பொங்குவதற்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடுனர்களால் அனுமதி பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |