குருந்தூர்மலை பொங்கல் விழாவில் பதற்றம்: சப்பாத்து காலால் தீயை மிதித்து அணைத்த பொலிஸார்(Video)
முல்லைத்தீவு - குருந்தூர்மலையில் பொங்கல் வழிபாடு மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பொலிஸாரும் பிக்குகளும் இடையூறு விளைவித்து வருவதால் அங்குப் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த பொங்கல் வழிபாடு இன்றைய தினம் (14.07.2023) முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையிலேயே பொலிஸார் இவ்வாறு இடையூறு விளைவித்துள்ளனர்.
ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் பொங்கலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டபோது, பொலிஸார் சப்பாத்து காலால் தீயை மிதித்து அணைத்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
பொங்கல் செய்ய முடியாது
பொங்கல் விழாவுக்கு அனுமதி கோரி ஏற்பாட்டாளர்கள் நேற்று (13.07.2023) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். நீதிமன்றம் அதற்கு அனுமதியளித்திருந்தது.
இன்று காலையில் பொங்கல் விழாவுக்காகத் தமிழ் மக்கள் சென்றபோது, அங்கு பெரும்பான்மையினர் பலருடன். பௌத்த பிக்குகளும் குவிந்திருந்துள்ளனர்.
அங்கு தீமூட்டி பொங்கல் செய்ய முடியாது என பெரும்பான்மையினர் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அங்குப் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
பொங்கல் மேற்கொள்ள ஏற்பாடு
முல்லைத்தீவு நீதிமன்றத்தின் அனுமதியுடனேயே பொங்கல் வழிபாட்டுக்கு வந்துள்ளதாகத் தமிழ் மக்கள் தெரிவித்த போதும், அதை அவர்கள் கணக்கிலெடுக்கவில்லை என கூறியுள்ளனர்.
இதையடுத்து தொல்பொருள் திணைக்களத்தினரை நாடிய தமிழ் தரப்பினர், நீதிமன்ற அனுமதிப்படி பொங்கல் மேற்கொள்ள அனுமதிக்கும்படி கேட்டுள்ளனர்.
நிலத்தில் தீ மூட்டாமல், தகரம் வைத்து அதன்மேல் கல் வைத்து தீமூட்டுமாறு தொல்பொருள் திணைக்களத்தினர் அறிவித்துள்ளனர்.
தொல்பொருள் திணைக்களத்தினரின் அறிவுறுத்தலின்படி, தகரத்தின் மீது பொங்கல் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தீமுட்டத் தயாரான போது, முல்லைத்தீவு பொலிஸார் பொங்கலுக்கு தடையேற்படுத்தியுள்ளனர்.
சப்பாத்து காலால் தீயை மிதித்து அணைத்தனர் என்று கூறப்படுகின்றது.
அங்கு பதற்றமான நிலைமையேற்பட்டுள்ள நிலையில், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

25 நிமிடம், 24 தாக்குதல்கள்: குறிவைக்கப்பட்ட 9 பயங்கரவாத முகாம்கள், 70 பேர் பலி! பாகிஸ்தானில் இந்தியா அதிரடி News Lankasri
