கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான அறிக்கை மன்றில் சமர்ப்பிப்பு(Video)
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 08.08.2023 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்டு அதற்கான திட்டங்கள் இன்றையதினம் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய குறித்த வழக்கு தொடர்பில் வழங்கப்பட்ட உத்தரவின் பிரகாரம் இன்றைய தினம்(17.08.2023) தொல்பொருள் திணைக்களத்தினர், சட்டவைத்திய அதிகாரி அடங்கிய குழுவினர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் பிரதிநிதிகள், மற்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.பார்த்தீபன் தலைமையில் எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணையில் அகழ்வு பணி தொடர்பான பாதீட்டு அறிக்கையினை தொல்பொருள் திணைக்களம் மன்றில் சமர்ப்பித்துள்ளது.
இது தொடர்பாக சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் ஊடகங்களுக்கு பின்வருமாறு கருத்து தெரிவித்துள்ளார்.
"அகழ்வு பணிக்காக நிதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு கிடைக்கப் பெறாத நிலையில் உடனடியாக அகழ்வு பணியை மேற்கொள்ள முடியாது இருப்பதாக சட்ட வைத்திய அதிகாரியினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அகழ்வு பணி
இதன் பிரகாரம் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மன்றில் பாதீட்டினை தாக்கல் செய்து அகழ்வு பணியினை மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், பேராசிரியர் புஷ்பரெட்ணமும் இந்த அகழ்வு பணியில் ஈடுபடுவதற்கு தனது சம்மதத்தை தெரிவித்திருந்தனர். எனினும் அதற்கான நிதி கிடைக்காததன் அடிப்படையில் அகழ்வு பணி மேற்கொள்ளப்பட முடியாது இருக்கின்றது.
இந்நிலையில் இந்த வழக்கு இந்த மாதம் 31 ஆம் திகதி
எடுத்துக்கொள்ளப்பட உள்ளதுடன் அத்தோடு இன்று நீதிமன்றத்தில் பிரசன்னமாக தவறிய பிரதேச செயலாளர் மாவட்ட செயலக அதிகாரிகள் பிரதேச சபையினர் மின்சார
சபையினர் ஆகியோர், அடுத்த தவணை நீதிமன்றத்தில் கட்டாயம் பிரசன்னமாகி அகழ்வு
பணியினை மேற்கொள்வதற்கான ஆவணம் செய்யுமாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது." என தெரிவித்துள்ளார்.