குறிஞ்சாக்கேணி படகுப் பாதை விபத்து.. முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
கிண்ணியா பிரதேச சபையின் அமர்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதேச சபை உறுப்பினர் அப்துல் ஹாதீ, 2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற குறிஞ்சாக்கேணி படகுப் பாதை விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை உரிய இழப்பீடு வழங்கப்படாமை குறித்து தமது கடுமையான ஆதங்கத்தையும் கோரிக்கையையும் கிண்ணியா பிரதேச சபையின் சபை அமர்வின் போது கோரிக்கை விடுத்தார்.
2021 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் திகதி, முறையான அனுமதியற்ற படகுப் பாதையால் ஏற்பட்ட விபத்தில் பிஞ்சு மாணவ, மாணவியர்கள் உட்பட 8 உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.
உயிரிழந்த அனைவருக்கும் இறைவன் சுவன வாழ்வை வழங்கப் பிரார்த்தித்ததுடன், அவர்களின் நினைவாகச் சபையில் ஒரு நிமிடம் மௌன ஆராதனை செலுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
நிதி ஒதுக்கீடும் இழப்பீட்டுத் தாமதமும்
சவூதி அரசாங்கத்தின் நன்கொடையாகப் பாலம் அமைப்பதற்கு 1,044.5 மில்லியன் ரூபாவும், படகுப் பாதைக்காக 7 கோடி ரூபாவும் செலவிட முடிந்திருக்கும் சூழலில், உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கும் தலா 5 இலட்சம் ரூபா வீதம் மொத்தம் 40 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்குவதற்கு அரசாங்கத்தால் முடியாதா என அவர் கேள்வி எழுப்பினார்.

விபத்து தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதென்றும், நீதிமன்றத் தீர்ப்பு வர வேண்டும் என்றும் காரணம் காட்டி இழப்பீட்டைத் தொடர்ந்தும் தாமதப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
சட்டப் பொறுப்புகள் ஒருபுறமிருக்க, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள் மற்றும் சொத்துக்களை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய மனிதாபிமானப் பொறுப்பை அரசாங்கம் மறந்துவிடக் கூடாது. இது வெறுமனே ஒரு நிதிக் கோரிக்கை அல்ல, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையாகும்.
எனவே, அரசாங்கமும், மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதி அமைச்சரும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாகத் தலையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சபையின் ஊடாக அவர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.
சம்பள முரண்பாட்டை தீர்க்க கோரும் ஆசிரியர்கள் மீது சேறு பூச வேண்டாம்! தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்