குமுழமுனை கொட்டுக்கிணற்றான் கோவில் கேணி புனரமைப்பு : 80 வருடங்களின் பின் நிகழப்போகும் மாற்றம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் குமுழமுனை கிராமத்தில் உள்ள ஆலயம் தான் கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலயமாகும். தலைவெட்டிப் பிள்ளையார் எனவும் அழைக்கப்படுகின்றது.
வன்னிப்பெரு நிலப்பரப்பில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் இதுவும் ஒன்று. ஆச்சரியமிகு வரலாற்று நிகழ்வுகளை தன்னகத்தே கொண்டமைந்த ஆலயம் இதுவாகும்.
80 வருடங்களின் பின்னர் நிகழும் மாற்றங்கள்
1940ஆம் ஆண்டளவில் கட்டப்பட்ட கொட்டுக்கிணற்றான் ஆலயத்தின் கேணி 80 வருடங்களின் பின்னர் தான் இப்போது புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கேணி முழுமையாக புனரமைக்கப்படுவது மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கின்றது.
தன் சிறு பராயத்தில் கட்டப்பட்ட இந்த கேணி மூன்று ஏக்கர் வயல் நிலங்களில் சிறு போக நெற் செய்கைக்கான நீரை வழங்குமளவுக்கு ஊற்றைக் கொண்டது என குமுழமுனை கிராமத்தின் ஆன்மீக ஈடுபாடு கொண்ட முதுசங்களில் ஒருவரான கந்தசாமி ஐயா(முருகர் கனகர் கந்தசாமி) அவர்கள் குறிப்பிட்டார்.
ஆலய பரிபாலன சபை சார்பாக கருத்திட்ட திரு குணபாலன் (பாடசாலையொன்றின் அதிபராக கடமையாற்றுகின்றார்.) அவர்கள் கேணி புனரமைப்புத் தொடர்பாக விரிவான தகவல்களை பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கேணி புனரமைப்புப் பணியினை ஆலய பரிபாலன சபையே பொறுப்பாக முன்னெடுக்கின்றது. இந்த திட்டம் கடந்த ஐந்தாண்டுகளாக முன் மொழியப்பட்டிருந்த போதும் இப்போதே தம்மால் முன்னெடுக்க முடிந்ததாகவும் மூன்று கட்டங்களாக இது முன்னெடுக்கப்பட இருப்பதாகவும் கூறினார்.
நிதி பற்றாக்குறை மற்றும் கோவிட் -19 தாக்கம் என பல காரணிகள் தடங்களை ஏற்படுத்தியிருந்தன. உலக குமுழமுனை மேம்பாட்டு ஒன்றியத்தின் நிதிப்பங்களிப்போடு இது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் 43.3 மில்லியன் மொத்த நிதி திரட்டை இந்த திட்டம் கொண்டுள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டதோடு கொட்டுக்கிணற்றான் ஆலயத்தினரும் ஒரு பகுதி நிதியை திரட்டி வழங்கிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
சுற்றுலாப் பயணிகளை கவரக் கூடியதாக இந்த கேணியின் புதிய கட்டுமானப் பணிகள் திட்டமிட்டிருப்பதாகவும் துறைசார் வல்லுநர்கள் பலரது ஆலோசனைகள் பெறப்பட்டு திட்டமிடல் பூர்த்தி செய்யப்பட்டு இப்போது புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் புனரமைப்பு பணிகள் தொடர்பாக சபா (மிருக வைத்தியர்) குறிப்பிடும் போது தெரித்தமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.
குமுழமுனை சமூக மேம்பாட்டு ஒன்றியம்
முல்லைத்தீவு குமுழமுனையில் இருந்து புலம்பெயர்ந்து உலகமெங்கும் வாழ்ந்து வருவோர் இணைந்து உருவாக்கிய ஒன்றியம் தான் உலக குமுழமுனை சமூக மேம்பாட்டு ஒன்றியம் ஆகும்.
இது தன்னார்வ அடிப்படையில் தமக்கிடையே நிதியை திரட்டி குமுழமுனையின் சமூக மேம்பாட்டுக்காக வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தாயகப் பரப்பில் குமுழமுனையில் இந்த நிதியை பயன்படுத்துவதற்காக குமுழமுனை சமூக மேம்பாட்டு ஒன்றியம் என்ற அமைப்பு நிறுவப்பட்டுள்ளதாகவும் அதனூடாகவே நிதி பயன்படுத்தப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் குமுழமுனை சமூக மேம்பாட்டு ஒன்றியம் சார்பாக பேசிய திவாகர் குறிப்பிட்டிருந்தார்.
பணிகளை திட்டமிடும் போது உலக குமுழமுனை சமூக மேம்பாட்டு ஒன்றியத்தினருடனும் ஆலோசிக்கப்படுவதாகவும் மேலும் குறிப்பிட்டார்.
நெல் சேகரிப்பு முறை
குமுழமுனையைச் சேர்ந்த நெல் விவசாயிகளிடம் கொட்டுக்கிணற்றான் ஆலய கேணி புனரமைப்புக்கான குறைநிரப்பு நிதியை திரட்டுவதற்காக நெல் சேகரிக்கும் திட்டத்தினை முன் வைத்ததாகவும் அதற்கு குமுழமுனை மக்களது பூரண ஆதரவு தமக்கு கிடைத்ததாகவும் குணபாலன் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
நெல் சேகரிப்புக்கான பைகளை ஒருவர் தன்னார்வமாக முன்வந்து தந்ததாகவும் ஒவ்வொரு விவசாயியும் ஒரு மூடை நெல் என்ற இலக்கை மனமுவந்து செய்ததாகவும் விபரித்த அவர் நேரத்திட்டமிலையும் விளக்கியிருந்தார்.
எல்லா விவசாயிகளிடமும் நெல்லுக்கான பையினை ஒரேநாளில் வழங்கியதாகவும் நெல் அறுவடையின் பின்னர் குறித்த ஒரு தினத்தை தீர்மானித்து அன்றைய நாளில் எல்லா விவசாயிகளிடமும் நெல்லை சேகரித்து கொண்டதாகவும் குறிப்பிட்டார்.
பின் அந்த நெல் நடைமுறை விலைக்கு சந்தைப்படுத்தப்பட்டு பெற்ற நிதியினை ஆலய கேணி புனரமைப்புக்கு பயன்படுத்துவதாகவும் தெளிவுபடுத்தினார்.
நெல் அறுவடையின் போது முதல் கோலலை இலாபம் என்று சொல்வது போல் இந்த முறை முதல்
கோலலை (முதல் நெல் மூடையை) கொட்டுக்கிணற்றானுக்கு என எடுத்து வைத்ததாக ஒரு
விவசாயி தெரிவித்திருந்தமையும் இங்கே கவனிக்கத்தக்கது.





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
