அரை நூற்றாண்டாக குடிநீருக்காக போராடும் கொட்டகலை தோட்ட மக்கள்
கொட்டகலை பிரதேச சபைக்கு மிகவும் சமீபமாக அமைந்துள்ள டிரேட்டன் கே.ஓ. பிரிவு தோட்ட மக்களுக்கு சுமார் 40 முதல் 50 ஆண்டுகளாக குடிநீருக்காக போராடுவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த தோட்டத்தில் சுமார் 24 குடியிருப்புக்களில் சுமார் 250 இற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்வதாகவும் இது இன்று நேற்றல்ல தொடர் பிரச்சினையாகவே தொடர்ந்து வருகிறது.
பல ஆண்டுகளாக அரசியல் வாக்குறுதிகள் வழங்கப்பட்டும் இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
குடிநீர் தட்டுப்பாடு
மலையகத்தின் முக்கிய தோட்டப் பகுதிகளில் ஒன்றான கொட்டகலை டிரேட்டன் கே.ஓ. பிரிவு தோட்டத்தில் வாழும் மக்கள் பல தசாப்தங்களாக குடிநீர் இல்லாமல் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
வறட்சியான காலங்களில் இந்த பிரச்சினை மேலும் மோசமடைவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

அன்றாட தேவைகளுக்கே தண்ணீர் பெற முடியாத நிலை உருவாகி, பெண்கள் மற்றும் சிறார்கள் நீர் தேடி நீண்ட தூரங்கள் பயணம் செய்ய வேண்டிய உள்ளதாகவும் நீர் வரும் போது நீருக்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து கருத்து தெரிவிக்கையில் 'நாங்கள் 40, 50 வருடமாக தண்ணீர் இல்லாமல் துன்பப்படுகிறோம். வறட்சி காலத்தில் ஒரு குடம் தண்ணீர் கூட கிடைக்காது. அரசியல்வாதிகள் வந்து வாக்குறுதி கொடுத்து போகிறார்கள். ஆனால் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.




