கொள்ளுப்பிட்டியில் நடந்த கோர விபத்து-சந்தேக நபர் துபாய் நாட்டுக்கு தப்பியோட்டம்
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் கோர விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தின் போது ஆடம்பர காரை ஓட்டுச் சென்ற நபர் துபாய் நாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
24 வயதான சந்தேக நபர் துபாயில் வசித்து வந்தவர்
24 வயதான இந்த சந்தேக நபர் வர்த்தகர் என சந்தேகிப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். மேலும் இந்த சந்தேக நபர் துபாய் நாட்டில் வசித்து வந்தவர் எனவும் அவர் கூறியுள்ளார்.
சந்தேக நபரை கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் உதவியை பெற்றுக்கொள்வதற்கு தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
எதிரில் வந்த முச்சக்கர வண்டியில் மோதிய கார்
கடந்த 10 ஆம் திகதி காலை கொள்ளுப்பிட்டியில் தனியார் வங்கி ஒன்று எதிரில் உள்ள வீதியில் பம்பலப்பிட்டியில் இருந்து காலிமுகத் திடல் நோக்கி சென்ற கார், எதிரில் வந்த முச்சக்கர வண்டியில் மோதி விபத்துக்குள்ளானது.
சம்பவத்தில் படுகாயமடைந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய காரை ஒட்டுச் சென்ற நபர் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார்.
விபத்து நடந்து குறுகிய காலத்திற்குள் சந்தேக நபர் துபாய் நாட்டுக்கு தப்பிச் சென்று விட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
விபத்து நடந்த நேரத்தில் காரில் மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் இருந்துள்ளார். விபத்தில் காயமடைந்த 29 மற்றும் 31 வயதான பெண்கள் விபத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இரவு நேர களியாட்ட விடுதியில் இருந்து திரும்பிக்கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.