கொக்குத்தொடுவாயில் இளைஞன் வெட்டிக்கொலை.. மோப்பநாய் சகிதம் தீவிர தேடுதல்
கொக்குத்தொடுவாய் களப்பு கடலிற்கு தொழிலுக்கு சென்ற இளைஞன் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.
கொக்குத்தொடுவாய் கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்திற்கு 300 மீற்றர் முன்பாக கொக்குத்தொடுவாய் களப்பு கடலில் நேற்று 07.08.2025 இரவு தொழிலுக்கு சென்ற இளைஞன் இன்று (08) அதிகாலை தொழில் முடித்து மோட்டார் சைக்கிளில் திரும்பிய போது பின்பக்கமாக துரத்தி வந்து கொக்குதாெடுவாய் களப்பு கடலில் இருந்து 50மீற்றர் தூரத்தில் கூரிய ஆயுதத்தால் வெட்டிக்கொலை செய்துள்ளனர்.
உடலில் வெட்டுக் காயங்கள்..
இன்று அதிகாலை 2.30 மணியளவில் வேறு நபர் ஒருவர் தொழிலுக்கு வரும்போது குறித்த இளைஞன் வீதியில் வீழ்ந்து கிடப்பதை கண்டுள்ளார்.
அப்பகுதியில் யானை நடமாட்டம் அதிகமாகையால் யானை அடித்து விட்டதோ என கூறி குறித்த இளைஞனின் தந்தையையும், கிராம அபிவிருத்தி சங்க தலைவரையும் விரைந்து அவ்விடத்திற்கு கூட்டிக்கொண்டு வந்து பார்த்த போதே இளைஞனின் உடலில் வெட்டுக் காயங்கள் இருந்துள்ளமை தெரியவந்ததுள்ளது.
பின்னர் கொக்குளாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து தீவிர விசாரணையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
அத்தோடு சம்பவ இடத்திற்கு வருகைதந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் சடலத்தை பார்வையிட்டு மோப்பநாய் சகிதம் சோதனையை மேற்கொள்ளுமாறும், கைவிரல் அடையாளத்தை பரிசோதனை மேற்கொள்ளுமாறும் , சடலத்தை உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கவும் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மோப்ப நாய் சகிதம் பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்தோடு விசாரணைக்காக குறித்த இளைஞனின் அத்தானை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
குறித்த இளைஞன் யாரால் கொலை செய்யப்பட்டார், என்ன காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார் என்ற பல்வேறு கோணத்தில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
குறித்த சம்பவத்தில் கொக்குத்தொடுவாய் வடக்கினை சேர்ந்த ஜெயராஜ் சுபராஜ் என்ற 21 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் சிறந்த மரதனோட்ட வீரனாவார். வடமாகாணத்தில் பல சாதனைகளை கடந்த காலங்களில் பெற்றிருக்கின்றார் என்பது குறிப்பிடதக்கது.









