கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் வரலாற்றுச் சாதனை படைத்த தரம் 5 மாணவர்கள்
கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயம் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், 2026ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 94 சதவீத சித்தியைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
இம்முறை பாடசாலையிலிருந்து 132 மாணவிகள் பரீட்சைக்குத் தோற்றிய நிலையில், அவர்களில் 124 மாணவிகள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர். மேலும், 28 மாணவிகள் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சிறப்பான பெறுபேற்றை பதிவு செய்துள்ளனர்.
கடந்த 2025ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் பாடசாலையின் சித்தி வீதம் 86 சதவீதமாக காணப்பட்ட நிலையில், இம்முறை அது 94 சதவீதமாக உயர்ந்துள்ளது.
வரலாற்றுச் சாதனை
இதற்கு முன்னர் பாடசாலை வரலாற்றில் இத்தகைய உயர்ந்த சித்தி வீதம் பதிவாகியிருக்காத நிலையில், 2026ஆம் ஆண்டில் 94 சதவீத சித்தி பெறப்பட்டுள்ளமை பாடசாலையின் வரலாற்றில் முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.

மாணவிகளின் அர்ப்பணிப்பு, ஆசிரியர்களின் அயராத உழைப்பு, பெற்றோரின் ஒத்துழைப்பு மற்றும் பாடசாலை நிர்வாகத்தின் வழிகாட்டல் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பெறுபேறாக இந்த வரலாற்றுச் சாதனை அமைந்துள்ளதாக பாடசாலை அதிபர் எஸ்.எம். ரஹீம் தெரிவித்துள்ளார்.
பல தியாகங்களை மேற்கொண்டு இரவு பகல் பாராது கல்வி கற்று, பரீட்சைக்குத் தோற்றி சிறந்த பெறுபேற்றை பெற்ற சாதனை மாணவிகளுக்கு அதிபர் தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
மாணவிகளுக்கு சிறப்பாகக் கற்பித்து, ஆலோசனைகள் வழங்கி, அவர்களை நெறிப்படுத்தி பரீட்சைக்குத் தயார்படுத்திய ஆசிரியர்களுக்கும் அவர் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
மாணவிகளின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்து பல்வேறு உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்கிய பெற்றோர்களுக்கும், வலயக் கல்விப் பணிப்பாளர், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆலோசகர்கள், வளவாளர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவருக்கும் அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 18