பிரித்தானிய மன்னரின் அமெரிக்க பயணம்! விளக்கத்திற்காக காத்திருக்கும் முழு நாடு..
கிரீன்லாந்து தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள அச்சுறுத்தல் கருத்துகளைத் தொடர்ந்து, பிரித்தானிய மன்னர் கிங் சார்ல்ஸ் அமெரிக்காவுக்கு மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படும் அரசுமுறைப் பயணத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இதுவரை அந்தப் பயணம் குறித்து எந்த உத்தியோகபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
கிரீன்லாந்தை மிரட்டும் நிலை
எனினும், லிபரல் டெமோக்ராட் கட்சித் தலைவர் எட் டேவி, ட்ரம்ப் தொடர்ந்து கிரீன்லாந்தை மிரட்டும் நிலை நீடித்தால், ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவுக்கான அரசுமுறைப் பயணம் நடத்தப்படக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பிரச்சாரம் செய்து வரும் ‘ரிபப்ளிக்’ அமைப்பும், இந்த அரசுமுறைப் பயணத்தை நிறுத்த வேண்டும் என கோரியுள்ளது.

அந்த அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி கிரேயம் ஸ்மித் கூறுகையில், “அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்பை சந்திக்க கிங் சார்ல்ஸ் செல்வது, ட்ரம்பின் அரசியல் நோக்கங்களுக்கு உதவுவதோடு, பிரித்தானியாவை பலவீனமானதும் அடிமைபோன்றதுமான நிலைக்கு தள்ளும்” என தெரிவித்துள்ளார்.
கிங் சார்ல்ஸ் அமெரிக்கா செல்ல வேண்டுமா இல்லையா என்பது பக்கிங்ஹாம் அரண்மனையின் தீர்மானம் அல்ல; அது முழுமையாக அரசாங்கத்தின் முடிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுமுறைப் பயணங்கள்
அரசுமுறைப் பயணங்கள் அனைத்தும் அரசாங்கத்தின் சார்பில் மேற்கொள்ளப்படுகின்றன. அமெரிக்காவின் 250ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, இந்த அரசுமுறைப் பயணம் பிரித்தானியா – அமெரிக்கா இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வாக கருதப்பட்டு வந்தது.
கடந்த செப்டம்பரில், டொனால்ட் ட்ரம்ப் விண்சர் கோட்டையில் கிங் சார்ல்ஸை சந்தித்த போது, அரச குடும்பத்தின் மீது அவர் காட்டிய ஆர்வம், பிரித்தானியாவிற்கு அரசியல் ரீதியாக சில ஆதாயங்களை ஏற்படுத்தியதாகவும் கூறப்பட்டது.

ட்ரம்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் கிங் சார்ல்ஸ் ஒரு முக்கிய ‘அரசியல் அட்டை’யாக பார்க்கப்பட்டார். ஆனால் தற்போதைய சூழலில், இந்த விவகாரம் பிரதமர் கியர் ஸ்டார்மருக்கு கடினமான முடிவாக மாறியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் கேட்கப்பட்டபோது, அவர் நேரடி பதிலைத் தவிர்த்து, “கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அமெரிக்காவுடன் நல்லுறவை பேணுவது அவசியம்” என மட்டும் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் வரிகள்
டவுனிங் ஸ்ட்ரீட்டில், இந்தப் பயணத்தை ரத்து செய்தால் அது அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கையாக கருதப்படுமா, அல்லது பயணம் முன்னெடுக்கப்பட்டால் பிரித்தானியாவின் மீது கூடுதல் வர்த்தக வரிகள் உள்ளிட்ட பொருளாதார அழுத்தங்கள் ஏற்படுமா என்பதைக் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், அந்தப் பயணம் நடைபெறலாம் என கூறப்படும் காலத்திற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில், அதற்குள் இந்த அரசியல் பதற்றம் தணியும் என்ற நம்பிக்கையுடன் அரசாங்கம் காத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், உள்துறை அமைச்சர் இவேட் கூப்பர், இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் காமன்ஸ் சபையில் விளக்கம் அளிப்பதை நாடு முழுவதும் எதிர்பார்த்து காத்திருக்கிறது.