இலங்கையில் இடம்பெறும் கொலைகள் குறித்த பகீர் தகவல்
நாட்டில் இடம்பெற்று வரும் கொலைகள் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களாக பாதாள உலகக்குழு மோதல்கள் மற்றும் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் கொலை செய்வதற்காக சிறு தொகை பணம் அல்லது போதைப்பொருள் பெற்றுக் கொள்ளப்படுவதாக தெரியவந்துள்ளது.
மனித உயிரின் மதிப்பு
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மனித உயிரின் மதிப்பை எவ்வளவு குறைவாக கருதுகின்றனர் வெளிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.
இவ்வாறான படுகொலைகளை மேற்கொள்வதற்காக கொலையாளிகளை பணிக்கு அமர்த்தும் முகவர்கள் பலர் செயற்பட்டு வருவதாக காவல்துறையினர் விசாரணைகள் மூலம் கண்டறிந்துள்ளனர்.
அண்மைய கொலைகள் குறித்த பொலிஸ் விசாரணைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இந்த முகவர்கள் ஆயுதங்கள் மற்றும் வாகனங்கள் போன்றவற்றை ரகசியமாக கொலையாளி குழுக்களுக்கு வழங்குவதிலும் ஈடுபடுகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த முகவர்கள், இலக்கு வைக்கப்பட வேண்டியவர்கள் நடமாடும் தகவல்களை சேகரித்து, துப்பாக்கிதாரிகளுக்கு அனுப்பி வைப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
போதைப்பொருள் வழங்குவதாக தகவல்
சில சந்தர்ப்பங்களில் துப்பாக்கிதாரிகளுக்கு ஒரு நாள் பயன்பாட்டிற்கு ஒரு போதைப்பொருள் மட்டும் வழங்கப்பட்டு கொலைகள் மேற்கொள்ளப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், ஆரம்பத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட மொத்த பணம் கூட சில சந்தர்ப்பங்களில் குற்றவாளிகளுக்கு செலுத்தப்படவில்லை என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
2025 பெப்ரவரியில் மித்தெனியாவில் நடந்த மிகவும் பரபரப்பான வழக்கு ஒன்றில், பாதாள உலகக் குழு உறுப்பினரான அருண "கஜ்ஜா" விதானகமகே மற்றும் அவரது இரு குழந்தைகள் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டனர்.
ஒப்பந்தக் கொலை
இந்த ஒப்பந்தக் கொலை 5 இலட்சம் ரூபாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு, 2.5 இலட்சம் ரூபா முன்பணமாக வெளிநாட்டில் இருந்து பரிமாறப்பட்டதாக விசாரணைகள் வெளிப்படுத்தின.
மேலும், கொழும்பு நீதிமன்றத்தில் வழக்கறிஞராக மாறுவேடமிட்டு பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவரை சுட்டவர், இந்தத் தாக்குதலுக்கு 15 மில்லியன் ரூபா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாலும், முன்பணமாக 2 இலட்சம் ரூபா மட்டுமே செலுத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் வன்முறைக் குற்றங்கள் குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்துள்ளன. 2025 இல் இதுவரை, 76 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இதில் 41 பேர் உயிரிழந்து, 43 பேர் காயமடைந்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




