கிளிநொச்சிக்கு களவிஜயம் செய்த டக்ளஸ் - காணி நீர் வீண்விரயம் தொடர்பில் கலந்துரையாடல்(Video)
கிளிநொச்சி மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று(12.07.2023) நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில், மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்ட பிரச்சினைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
கலந்துரையாடப்பட்ட விடயங்கள்
இந்த கலந்துரையாடலில் கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் வர்த்தக நிலையங்களை ஒதுக்குதல், படித்த மகளீர் திட்ட காணி விவகாரம், கரும்புத் தோட்ட காணி, விவசாயம், நீர்ப்பாசன நடவடிக்கைகள் உட்பட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.
இதன்போது கமக்கார அமைப்புகள் தமது நெல்லுக்கான உரிய விலை கிடைக்கப்படாத காரணத்தினால் தாம் பல்வேறு வகையிலும் பாவிக்கப்பட்டதாகவும் இதற்கு தீர்வுகளை பெற்றுத்தர வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இதற்கு கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் கருத்து தெரிவிக்கையில், ஒரு கிலோ
நெல்லுக்கான விலை 95 ரூபாய் எனவும், ஒரு விவசாயிடமிருந்து 5000 கிலோ நெல்லினை
நாளை முதல் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக கொள்வனவு செய்ய உள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், கிளிநொச்சி பகுதியில் பயிர் செய்கை நடவடிக்கைகளுக்கு
பயன்படுத்தப்படாமல் கடலில் கலக்கின்ற நீரினை உரிய முறையில் பயன்படுத்துவது
தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன்
கலந்துரையாடிய நிலையில் இன்று காலை குறித்த பகுதிகளுக்கு சம்பந்தப்பட்ட
திணைக்கள அதிகாரிகளுடன் கள விஜயத்தினை மேற்கொண்டார்.
இதற்கமைய கிளிநொச்சி - இரணைமடு குளத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறு போக செய்கைக்காண நீர் விநியோகத்தில், வீண்விரயமாக வெளியேறும் மேலதிக நீரை தடுத்து ஏனைய காணிகளை சேர்த்துக்கொள்வது தொடர்பில் ஆராயும் பொருட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கள விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது சிறுபோக செய்கைக்கான நீர் வினியோகத்தின் போது மேலதிகமான நீர் கழிவு வாய்க்கால்கள் ஊடாக வெளியேறி கடலைச் சென்றடைகின்றது.
இவ்வாறு வெளியேறுகின்ற நீரை தடுத்து ஏனைய காணிகளையும் உள்வாங்கி பயிர்செய்கைகளை விஸ்தரிப்பது தொடர்பில் குறித்த கள விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரணைமடு குளத்தின் புனரமைப்பு
கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடு குளத்தின் புனரமைப்பு பணிகள் 2017 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டதுடன் அதன் நீர் கொள்ளளவு 36 அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இக்குளத்தின் கீழுள்ள 21,985 ஏக்கர் நிலப்பரப்புக்கு மேலதிகமாக குமரபுரம் பரந்தன் கண்டாவளை ஆகிய பகுதிகளில் உள்ள மேலதிக காணிகளை இணைத்து நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் உள்ளீர்ககுமாறு கோரிக்கைகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், குறித்த நீரினை உரிய முறையில் பயன்படுத்துவதற்காக எதிர்காலங்களில் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இக் கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி
கேதீஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) ந.திருலிங்கநாதன், பிரதேச
செயலாளர்கள் உட்பட்ட சம்பந்தப்பட்ட அரச திணைக்கள அதிகாரிகள், மாவட்ட செயலக
உதவித் திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரின் இணைப்பாளர்,
விவசாய பிரிவின் உத்தியோகத்தர்கள், துறைசார்ந்த உத்தியோகத்தர்கள், விவசாய
அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |






