கிளிநொச்சியில் இரு அட்டைப் பண்ணைகளுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது: அன்னலிங்கம் அன்னராசா
கிளிநொச்சி மாவட்டத்தில் இரு கடல் அட்டை பண்ணைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கியதாக கிளிநொச்சி மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் வாக்குமூலம் வழங்கியதாக யாழ். மாவட்ட கடற் தொழிலாளர் சம்மேளனங்களின் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட பூநகரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இலவங்குடா கடற்தொழிலாளர்கள், தமது கடற் பகுதியைப் பாதிக்கும் அட்டைப் பண்ணைகளை தடுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் அண்மையில் முறைப்பாடு செய்திருந்தனர்.
யாழில் அமைந்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை
இந்நிலையில் நேற்றுமுன் தினம் (26.10.2022) முறைப்பட்டாளர்களும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் விசாரணைக்காக யாழில் அமைந்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஊடகங்களுக்கு நேற்றுமுன் தினம் (26.10.2022) கருத்து தெரிவிக்கும் போது அன்னலிங்கம் அன்னராசா இந்த விடயம் பற்றி கருத்துரைத்துள்ளார்.
சட்டவிரோத கடல் அட்டை பண்ணை வளர்ப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோத கடல் அட்டை பண்ணை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு கேள்வி எழுப்பிய நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரி தாம் இரண்டு பண்ணைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கியதாக தெரிவித்துள்ளார்.
இவரின் கருத்தில் இருந்து இலவங்குடா கடற்தொழிலாளர்களின் போராட்டம் நீதிக்கான ஜனநாயகப் போராட்டம் என நிரூபித்திருக்கிறது.
கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம்
கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கின்ற சட்டவிரோத கடல் அட்டை பண்ணை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு எடுத்து வருகின்ற நடவடிக்கை எமக்கு ஒரு உத்வேகத்தை தருகிறது.
ஆகவே மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கின்ற அனுமதியற்ற சட்டவிரோத கடல் அட்டை பண்ணைகளை அகற்றும் வரை எமது போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளார்.