தொழிற்சங்க போராட்டத்திற்கு ஒன்றிணையுமாறு கிளிநொச்சி அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கம் அழைப்பு
தற்போது நாட்டில் இடம்பெறும் அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க போராட்டத்திற்கு வலு சேர்க்கும் நோக்கில் கிளிநொச்சி மாவட்ட அதிபர் சங்கம் மற்றும் இலங்கை ஆசிரியர் சங்க கிளிநொச்சி கிளை என்பனவும் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.
நேற்று கிளிநொச்சி மாவட்ட ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு இந்த அழைப்பினை விடுத்துள்ளனர்.
குறித்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட கிளிநொச்சி மாவட்ட அதிபர் சங்கத் தலைவர் சவரி பூலோகராஜா தெரிவிக்கையில்,
வடபகுதியைச் சேர்ந்த நாம் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து போராட்டத்திற்கு வலுசேர்க்க எண்ணியுள்ளோம்.
கோவிட்டால் பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் மாணவர்களின் கல்வி இழக்கக்கூடாது என்ற நிலையில் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளைச் சேர்ந்த அதிபர்கள், ஆசிரியர்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு சூம் மற்றும் செயலட்டை ஊடாக கற்றலை மேற்கொண்டிருந்தோம்.
சம்பள முரண்பாடு தீர்க்கும் வரை அனைவரும் குறித்த கற்றல் செயற்பாடுகளிலிருந்து விலகியுள்ளோம்.
பெற்றோர்கள் எங்களோடு முரண்படாதீர்கள். எமது போராட்டம் தீர்வு பெற ஒத்துழைப்பு வழங்குங்கள். மாணவர்கள் இழந்த கல்வியை மீள வழங்குவோம்.
எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தில் எமக்கான சாதகமான முடிவு கிடைக்காவிடின் அடுத்த வாரமளவில் கிளிநொச்சி மாவட்டத்தில் பாரிய கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.
அதற்கு இன, மத, பேதமின்றி அனைவரும் ஒன்றிணையுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
தொடர்ந்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிளிநொச்சி கிளை செயலாளர் திருநாவுக்கரசு சிவரூபன் கருத்து தெரிவிக்கையில்,
நீண்டகாலமாக அதிபர், ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர் சங்கம் முன்னெடுக்கும் போராட்டத்தை காலத்திற்குக் காலம் வருகின்ற அரசுகளும் தீர்க்க தவறுகின்றன.
இந்த அரசாங்கத்தின் கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், சுபோதினி ஆணைக்குழுவை அமைத்து குறித்த ஆணைக்குழு ஊடாக அறிக்கை பெற்றும் அந்த அறிக்கையை இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை.
அதனை நடைமுறைப்படுத்தவே போராடுகின்றோம். 1997ம் ஆண்டு போன்று ஏனைய சேவையை போல் சமனான சம்பளத்தையே எமக்கும் வழங்குமாறு கேட்கின்றோம்.
நாடாளவிய ரீதியில் பேரெழுச்சி கொள்வது போல் கிளிநொச்சி மாவட்டத்திலும் போராட்டம் பேரெழுச்சி பெறும்.
மாவட்டத்தின் அதிபர், ஆசிரியர் சங்கங்கள் 100வீதம் கற்பித்தலிருந்து விலகுவதாக உறுதியளித்துள்ளனர்.
எமது பிரச்சினைக்கான சாதகமான பதில் கிடைக்குமா என்று ஒவ்வொரு அமைச்சரவை முடிவுகளிலும் எதிர்பார்க்கின்றோம்.
மூன்று வாரங்கள் கடந்தும் இதுவரை சாதக பதில் ஒன்றும் கிடைக்கவில்லை ஏனைய தொழிற்சங்கங்களின் போராட்டங்களுக்கு உடனே சாதகமான பதில் கிடைக்கிறது. எமது போராட்டத்திற்கு மட்டும் கிடைக்கவில்லை.
திங்கட்கிழமையும் அமைச்சரவை கூடுகின்றது. சாதகமான பதில் கிடைக்காது
விட்டால் அடுத்த வாரமளவில் கிளிநொச்சி கவனயீர்ப்பு போராட்டம் எம்மால்
மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

