சமரழகியின் மரணம் கடைசியாக இருக்கட்டும்! கிளிநொச்சியில் போராட்டம்
கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகர் பகுதியில் கடந்த முதலாம் திகதி சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில், கொலைக்கு காரணமானவர் என சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்து இன்று (07) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தப் போராட்டம், கிளிநொச்சி ஏ-09 வீதியில் அமைந்துள்ள பழைய மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமானது.
கவனயீர்ப்பு போராட்டம்
இதனைத் தொடர்ந்து பேரணியாகச் சென்ற போராட்டக்காரர்கள் புதிய மாவட்ட செயலகத்தை சென்றடைந்தனர்.
பின்னர், சிறுமியின் மரணம் தொடர்பில் உரிய முறையில் விசாரணைகளை முன்னெடுத்து, சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது.

மேலும், “கிளிநொச்சியில் சமரழகியின் சாவு கடைசியாக இருக்கட்டும்” என வலியுறுத்தியுள்ள போராட்டக்காரர்கள், சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட விடயங்களில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கும் அரசாங்கத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, சமரழகியின் மரண வாக்குமூலத்தில் மரணத்திற்கான காரணம் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், அது தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்காமல் சந்தேகநபர் விடுவிக்கப்பட்டதாகவும் போராட்ட ஏற்பாட்டாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் விசாரணைக்கு வந்த பொலிஸார் மற்றும் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் தொடர்பாக கடந்த 05ஆம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

