வேகமாக மாசடைந்து வரும் கிளிநொச்சி குளம்: குவியும் முறைப்பாடுகள்
கிளிநொச்சி நகருக்கான குடிநீரை பெற்றுக்கொள்ளும் கிளிநொச்சி குளம் மிக வேகமாக மாசடைந்து வருவதனால் தொடர்ந்தும் சுத்தமான குடிநீரை வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மை நாட்களாக குழாய் மூலமாக வழங்கப்பட்டு வரும் குடிநீரானது மண் நிறமாகவும்,பாவனைக்கேற்ற வகையிலும் இல்லை என்றும் பாவனையாளர்களால் தொடர்ந்து முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
மாவட்டத்தில் உள்ள மொத்த சனத்தொகையில் இருபத்தி நான்கு வீதமான மக்கள் தற்போது குறித்த குழாய் மூலமான நீரை பயன்படுத்தி வருகின்றனர்.
இதுவரை கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி கண்டாவளை பூநகரி பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இதுவரை பன்னிரெண்டாயிரம் வரையான நீர் இணைப்புகள் வழங்கப்பட்டு அவற்றினூடாக நீர் வழங்கப்பட்டு வருவதாகவும் தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர் சுத்திகரிப்பு நிலையம்
அத்துடன் குடிநீர் விநியோகத்திற்காக கிளிநொச்சி குளத்திலிருந்து நீர் பெற்றுக்கொள்ளப்பட்டு நீர் சுத்திகரிப்பு நிலையம் ஊடாக சுத்திகரிக்கப்பட்டு அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழக வளாகம் மற்றும் இரு ஆடை தொழிற்சாலைகள்,தொழில்நுட்பக் கல்லூரி,ஆனையிறவு உப்பளம் ஆகியனவும் குறித்த குழாய் மூலமான நீரையே பயன்படுத்தி வருகின்றது.
இந்நிலையில் குறித்த நீரை பெற்றுக் கொள்ளும் கிளிநொச்சி குளமானது தற்போது வேகமாக மாசடைந்து வருகின்றது.
அதாவது குளத்தில் உள்ள நீரேந்து பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு குடியிருப்புகளாக மாற்றப்பட்டுள்ளதுடன் அவர்களது பாவனைகளுக்காக சுமார் 196க்கும் மேற்பட்ட மலசல கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
அதனை விட கிளிநொச்சி குளத்துடன் இணையும் இரத்தினபுரம் ஆற்றின் இருமருங்கில் உள்ள காணிகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் கிளிநொச்சி நகரத்தில் சரியான கழிவகற்றல் பொறிமுறை இன்மையால் நகரத்தை அன்டிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வர்த்தகர்கள் பெரும்பலமான கழிவுகளை குளத்தின் அலை கரைப் பகுதிகளிலும் குளத்தைச் சூழவுள்ள பகுதிகளிலும் கொட்டப்படுகின்றன.

ஆற்றுப்பகுதிகளில் கொட்டப்படும் கழிவுகள்
இரத்தினபுரம்,கனகாம்பிகைக்குளம் வரையான ஆற்றுப்பகுதிகளிலும் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.
நகரத்திலிருந்து வெளியேறும் அனைத்து கழிவுநீர்களும் கிளிநொச்சி குளத்தையே சென்றடைகின்றன.
இதனால் கிளிநொச்சி குளத்தின் நீர் மிகவும் வேகமாக மாசடைந்து மனித பாவனைக்கு உதவாத நீராக மாறி உள்ளதாக கடந்த காலங்களில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மற்றும் மாவட்ட அவிருத்தி கூட்டங்களின் கலந்துரையாடப்பட்டது.
இந்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் எடுத்து சுத்தமான குடிநீர் பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |