இலங்கையில் போலியான ஆணைக்குழுக்களே செயற்படுகின்றன : வாசுகி வல்லிபுரம் (Video)
இலங்கையில் எத்தனை ஆணைக்குழுக்களை நியமித்தாலும் போலியான ஆணைக்குழுக்களாகவே அவை செயற்பட்டு வருகின்றதாக வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் வாசுகி வல்லிபுரம் தெரிவித்துள்ளார்.
கொக்கிளாய் மனித புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (21-09-2023) கிளிநொச்சி புதிய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதில் பங்கு கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
சஹ்ரான் குழு குறித்து சிக்கிய ஆதாரங்கள்: விடுதலைப் புலிகள் மீது திசை திருப்பிய புலனாய்வு பிரிவு: அம்பலமான தகவல்
போலியான ஆணைக்குழு
அவர் மேலும் தெரிவிக்கையில், குறிப்பாக இலங்கையில் போர் நடைபெற்று 14 ஆண்டுகள் கடந்தும் இன்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்படவில்லை.
இலங்கையில் எத்தனை ஆணைகுழுக்களை நியமித்தாலும் அவை போலியான ஆணைக்குழுக்களாகவே காணப்படுகின்றன.
அதாவது ஆணைகுழுக்கள் எந்த விதமான சட்ட ரீதியான அறிக்கைகளையும் வெளியிடவும் இல்லை. பொறுப்பு கூறலை இலங்கை அரசாங்கம் கொண்டு வரவும் இல்லை என்ற காரணத்தினால் இன்று இலங்கையில் உள்ளக பொறிமுறையை நம்பவில்லை என்பதை வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஊடாக நடைபெறுகின்ற இந்த கவனயீர்ப்பு போராட்டத்தின் ஊடாக வலியுறுத்துகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச விசாரணை
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கிடைக்க வேண்டும், மனிதப் புதைகுழிகளுக்கு சர்வதேச விசாரணை வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலும் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், கையளிக்கப்பட்ட எங்களது உறவுகள் எங்கே என்ற கோசங்களை எழுப்பியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழு மற்றும் கிளிநொச்சி பெண்கள் வாழ்வுரிமை சங்கம் மற்றும் பெண்கள் வலை அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |