கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்ல விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
கிளிநொச்சி - முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள வளைவினை அகற்றுமாறு கோரி கிளிநொச்சி நீதிமன்றத்தில் பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு மீள் விசாரணைக்கு திகதியிடப்பட்டுள்ளது.
குறித்த வழக்கானது, நாளைய தினம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னெடுக்கப்படவுள்ளது.
மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்காக முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக 2023ஆம் ஆண்டு வரவேற்பு வளைவு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.
மாவீரர் துயிலும் இல்லம்
இந்த வரவேற்பு வளைவால் விபத்துக்கள் ஏற்படும் சந்தர்ப்பங்கள் அதிகமாக காணப்படுவதால் வளைவினை அகற்றுமாறு கூறி, முழங்காவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியால் பூநகரி பிரதேச சபை செயலாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள பகுதியானது பூநகரி பிரதேச சபையினால் தாவரவியல் பூங்காவாக பேணப்பட்டு வருவதனாலேயே இவ்வாறு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், வளைவு அகற்றப்படாததால் பூநகரி பிரதேச சபை செயலாளருக்கு கட்டளை பிறப்பிக்குமாறு கோரி, முழங்காவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கமைய, வழக்கு விசாரணைகளில் அங்கு அமைக்கப்பட்டிருப்பது நிரந்தர கட்டடம் (நிரந்தர வளைவு) இல்லை என அதனால் பாதிப்புக்களோ அல்லது ஆபத்துக்களோ ஏற்படாது என்பதை உறுதிப்படுத்தும் தொழில்நுட்பட உத்தியோகஸ்தரின் ஆய்வு அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணை
இந்நிலையில், நேற்று முன்தினம் நடந்த குறித்த வழக்கு விசாரணைகளின் போது நாளை இவ்வழக்கில் முன்னிலையாகுமாறு பூநகரி பிரதேச சபையின் செயலாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய, வழக்கு விசாரணைகளில் முன்னிலையான பூநகரி பிரதேச சபையின் செயலாளர், அங்கு அமைக்கப்பட்டுள்ள வளைவு தற்காலிக வளைவு என்றும், அதனை அப்பகுதி மக்களே அமைத்தார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அவ்வளைவு மக்களின் உணர்வுடன் நேரடி சம்பந்தப்பட்ட விடயம். அதை அகற்றினால் இன நல்லிணக்கத்திற்கு பாதிப்புக்கள் ஏற்பட்டு, ஒரு குளப்பமான நிலை ஏற்படும் என தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமல்லாது, நீதிமன்றத்தில் இருந்த அனைத்து சட்டத்தரணிகளும் இவ்வழக்கில் முன்னிலையாகி குறித்த மாவீரர் துயிலும் இல்ல வளைவு அகற்றப்பட கூடாது என்பது தொடர்பான தமது சமர்ப்பனங்களையும் முன்வைத்திருந்தனர்.
இந்நிலையிலேயே குறித்த வழக்கு நாளைய தினம் விசாரணைக்காக திகதியிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |