கிளிநொச்சி மாவட்டத்தின் இந்த ஆண்டுக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
கிளிநொச்சி மாவட்டத்தின் இவ்வாண்டுக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று(25.02.2026) காலை9.00 மணிக்கு கிளிநொச்சி மாவட்டச் செயலக திறன்விருத்தி மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ளது.
குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் வடக்கு மாகாண ஆளுநருமான நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோரின் தலைமையில் குறித்த ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் ஆரம்பமானது.
திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகள்
இக்கலந்துரையாடலில் மாவட்ட ஒருங்கிணைப்பு அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்கள் குறிப்பாக வனஜீவராசிகள் மற்றும் வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள மக்களது காணிகள்,
விவசாய நிலங்கள், அரச தேவைக்கான காணிகள் போன்றவற்றை குறித்த திணைக்களங்களிடமிருந்து அபிவிருத்தியின் பொருட்டு விடுவித்தல் தொடர்பாகவும் , சமூக சக்தி நிதி ஒதுக்கீடுகள், மீள்குடியேற்ற வீட்டுத்திட்டங்கள், சுற்றுலாத்தளங்கள் அபிவிருத்தி,
அனர்த்த தணிப்பு செயற்திட்டங்கள், 2026ஆம் ஆண்டு அனுமதிக்காக தெரிவு செய்யப்பட்ட கிராமிய வீதிகள், முன்னுரிமை அடிப்படையில் புனரமைக்க வேண்டிய பாலங்கள்,கௌதாரிமுனை சுற்றுலா அபிவிருத்திக்கான காணி கோரிக்கை,மாவட்ட ஒருங்கிணைப்பு உபகுழுககளின் செயற்பாடுகள்,
பிரதேச செயலக டிஜிற்றல் மயமாக்கல் இரண்டாம் கட்ட செயற்பாடுகள், டித்வா புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு வழங்கல், மக்களுக்கான காணி ஆவணங்கள் மற்றும் காணிப் பிணக்குகள்,மணல் விநியோகம், நகர அபிவிருத்தி நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் வீதி அபிவிருத்தி திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் ஆரயப்படவுள்ளன.

கலந்துரையாடலில் யாழ் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வடமாகாண பிரதிப் பிரதம செயலாளர் வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், வடமாகாண அமைச்சு சார்ந்த திணைக்களங்களின் பணிப்பாளர்கள், இராணுவ மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள், பிரதேச சபைகளின் செயலாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் இணைப்பாளர், மாவட்ட திணைக்களங்கள் சார் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

